உங்கள் நாய் என்ன சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் எப்படி இருக்கும்? ஒரு புதிய தொழில்நுட்பம், நாய்கள் குரைக்கும் போது அவற்றின் உணர்வுகளை அனுமானிக்க உதவும்படி அவற்றின் “குரைத்தலை” அடையாளம் காண்கிறது. உயர் தொழில்நுட்பம் கொண்ட கழுத்துப் பட்டைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குரைப்புகளின் தரவைப் பயன்படுத்தி, நாய்களின் குரைப்புகளில் அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை அடையாளம் காணும். இந்த பட்டைகள் வார்த்தைகளை மொழிபெயர்க்காவிடினும், அவை உரிமையாளருக்கும் செல்லப்பிராணிக்கும் இடையே அதிக புரிதலை உண்டாக்குகிறது.
பிலேயாமின் கவனத்தைத் திருப்ப, தேவனும் ஒரு விலங்கைப் பயன்படுத்தினார். பிலேயாம் தனது கழுதையில் சேணம் வைத்து, தேவன் தனக்கு “நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும்” (எண் 22:20) என்று அறிவுறுத்தியதற்கு பிரதியுத்தரமாக மோவாபுக்குப் போய்க்கொண்டிருந்தான். தேவதூதன் “உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதை” (வ.23) கண்டதும் கழுதை நின்றது, இதை பிலேயாம் பார்க்கவில்லை. பிலேயாம் தொடர்ந்து முன்செல்ல முயன்றான், அதனால் தேவன் மனுஷர் பாஷையில் பேசுவதற்குக் கழுதைக்கு உதவினார். ஆபத்தைப் பார்க்கும்படி பிலேயாமின் கண்கள் இறுதியாகத் திறக்கப்பட்டபோது, ” தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்” (வ.31). தேவனின் அறிவுரைகளுக்கு மாறாக வெகுமதி பெறவும், தேவஜனங்களை சபிக்கவும் தனக்கிருந்த உள்நோக்கத்தை ஒப்புக்கொண்டான் (வ.37-38). “நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்” (வ.34) என்றான்.
வேதாகமத்தின் பக்கங்களிலும், பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும், பிறரின் ஞானமான ஆலோசனைகளிலும் தேவன் நமக்குக் கொடுக்கும் அறிவுரைகளுக்கு வெளிப்புறமாக மட்டுமல்ல, முழுமனதோடு நாம் செவிசாய்ப்போமாக.
உங்கள் வாழ்க்கையில் எப்பகுதியில் உள்ளார்ந்த விருப்பமின்றி, கீழ்ப்படிவதைப் போலக் காட்சியளிக்கிறீர்கள்? அதிலே அதிக கவனம் செலுத்தும்படி தேவன் எவ்வாறு அழைக்கிறார்?
பரலோகத் தகப்பனே, பாவம் மற்றும் எனக்கு தீங்குண்டாக்கும் காரியங்களிலிருந்து என்னை அன்புடன் வழிநடத்தித் திசைதிருப்புவதற்காக உமக்கு நன்றி.