மற்றொரு எதிர்பாராத உடல்நலக்குறைவுக்குப் பிறகு, மலைகளில் இளைப்பாறிட என் கணவரோடும் மற்ற குழுவினரோடும் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த மலையின் உச்சியில் உள்ள சிறிய தேவாலயத்திற்குச் செல்லும் மர படிக்கட்டுகளில் நான் ஏறினேன். இருட்டில் தனியாக, பிளந்திருந்த ஒரு படியில் ஓய்வெடுக்க நின்றேன். இசை தொடங்கியதும், “எனக்கு உதவும், ஆண்டவரே” என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன். நான் சிறிய அறைக்குள் நுழையும் வரை மெதுவாக நடந்தேன். நீடித்த வலியினுடே சுவாசித்தேன், வனாந்தரத்திலும் தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதற்கு நன்றியோடிருந்தேன்.
தேவனை ஆராதிக்கும் மிக நெருக்கமான தருணங்கள் வனாந்தரத்தில் நிகழ்ந்ததை வேதாகமம் பதிவு செய்கிறது. யூதாவின் வனாந்தரத்தில் மறைந்திருந்தபோதும், அநேகமாக தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது, தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்கீதம் 63:1). தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை “ஜீவனைப்பார்க்கிலும்” நல்லது என்று கருதினார் (வ.3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6). அவர், “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (வ.7-8) என்றார்.
தாவீதைப் போலவே, நம்முடைய சூழ்நிலைகள் அல்லது நமக்கு எதிராக நிற்பவர்களின் உறுதியைப் பொருட்படுத்தாமல், தேவனைத் துதிப்பதின் மூலம் தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வெளிக்காட்டலாம் (வ.11). நாம் கஷ்டப்பட்டாலும், சில நேரங்களில் நம்மிடம் தவறு இல்லையென்றாலும், தேவனின் அன்பு எப்போதும் ஜீவனைக்காட்டிலும் நல்லது என்பதை நம்பலாம்.
நீங்கள் பாதிக்கப்படுவதாகும் தோற்கடிக்கப்படுவதாகவும் உணருகையில், தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை அறிவது எவ்வாறு உங்களுக்கு உதவும்? கடினமான நேரங்களில் அவரை துதிப்பது எப்போது உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்தியது?
என் தேவனே, உமது அன்பு ஜீவனை பார்க்கிலும் நல்லது.