நான் ஓஹியோவில் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டருகே பல கட்டுமானப் பகுதிகள் இருந்தன. அவைகளால் ஈர்க்கப்பட்டு, மீந்த பொருட்களைக் கொண்டு நானும் எனது நண்பர்களும் ஒரு கோட்டை கட்ட எத்தனித்தோம். எங்கள் பெற்றோரிடமிருந்து கருவிகளைக் கடன் வாங்கி, நாங்கள் மரத்தை அறுத்து, எங்களைப் பொருட்களால் எங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பல நாட்கள் முயன்றோம். அது வேடிக்கையாக இருந்தது, ஆனால் எங்கள் முயற்சிகள் எங்களைச் சுற்றி நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களின் மோசமான பிரதிபலிப்பாக இருந்தன. அவை நீண்ட காலம் நீடிக்கவில்லை.
ஆதியாகமம் 11ல், ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை நாம் வாசிக்கிறோம். “வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி” (வ. 4) என்று ஜனங்கள் சொன்னார்கள். இந்த முயற்சியிலிருந்த ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், “நமக்குப் பேர் உண்டாக” (வ. 4) ஜனங்கள் அதைச் செய்தார்கள்.
இது மனிதர்களுக்கு ஒரு தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது; நமக்கும் நமது சாதனைகளுக்கும் நினைவுச்சின்னங்களை உருவாக்குகிறோம். பின்னர் வேதாகம நடையில், இந்தக் கதை தேவனின் ஆலயத்தைக் கட்டுவதற்கான சாலொமோனின் நோக்கத்துடன் முற்றிலுமாக முரண்படுகிறது: “என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்” (1 இராஜாக்கள் 5:5).
தான் கட்டுகிறவை தன்னை அல்ல தேவனையே சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை சாலொமோன் புரிந்துகொண்டார். இதைப் பற்றி அவர் ஒரு சங்கீதம் கூட எழுதும் அளவிற்கு இது ஒரு முக்கியமான பாடமாக இருந்தது. “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” (வ. 1) என்று சங்கீதம் 127 தொடங்குகிறது. என்னுடைய சிறுவயதுக் கோட்டைக் கட்டுவது போல், நாம் கட்டுவதெல்லாம் நிலைக்காது, ஆனால் தேவனின் நாமமும், அவருக்காக நாம் செய்வதும் நிலையான முக்கியத்துவம் வாய்ந்தது.
உங்கள் வாழ்க்கையை வைத்து நீங்கள் எதைக் கட்டுகிறீர்கள்? உங்கள் ஜீவியம் எவ்வாறு தேவனுக்கு கனத்தைச் சேர்க்கிறது?
தகப்பனே, நீர் உலகில் என்ன செய்கிறீர் என்பதில் கவனம் செலுத்தாமல், என் மீது மட்டுமே கவனம் செலுத்தியதற்காக என்னை மன்னியும்.