பெருவிற்கு ஒரு குறுகிய கால ஊழிய பயணத்தின் போது, ​​ஒரு இளைஞன் என்னிடம் பணம் கேட்டான். பாதுகாப்பு காரணங்களுக்காக, பணத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று எனது குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது, ஆகையால் நான் அவனுக்கு எவ்வாறு உதவுவது? அப்போஸ்தலர்களான பேதுருவும், யோவானும் அப்போஸ்தலர் 3-ல் குறிப்பிடப்பட்ட முடவனுக்கு அளித்த பதிலை நான் நினைவு கூர்ந்தேன். என்னால் அவனுக்குப் பணம் கொடுக்க இயலாது, ஆனால் தேவனின் அன்பைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவனுக்கு விளக்கினேன். தான் ஒரு அனாதை என்று அவன் சொன்னபோது, ​​தேவனே அவனுக்குத் தகப்பனாயிருக்க விரும்புகிறார் என்றேன். அதைக் கேட்டதும், அழுதான். அவனைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு, எங்களை உபசரித்த சபையின் உறுப்பினரோடு அவனை அறிமுகப்படுத்தினேன்.

சில நேரங்களில் நம் வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்பதாக உணரலாம், ஆனால் நாம் இயேசுவைப் பிறருடன் பகிரும்போது  பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்துவார்.

பேதுருவும் யோவானும் அந்த மனிதனை ஆலய பிராகாரத்தில் சந்தித்தபோது, ​​கிறிஸ்துவைப் பகிர்ந்துகொள்வதே மிகப் பெரிய பரிசு என்பதை அவர்கள் அறிந்தார்கள். “அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொ(ன்னான்)ல்லி” (வ. 6). அந்த மனிதன் அன்றே இரட்சிப்பையும் சுகத்தையும் பெற்றான். காணாமல் தொலைந்தவர்களை  தன்னிடமாய் இழுக்க, தேவன் தொடர்ந்து நம்மைப் பயன்படுத்துகிறார்.

இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில், கொடுப்பதற்குச் சரியான பரிசுகளைத் தேடுகையில், ​​இயேசுவையும்  அவர் அருளும் நித்திய இரட்சிப்பின் ஈவையும் கொடுப்பதே மிகநேர்த்தியான பரிசு என்பதை நினைவில் கொள்வோம். இரட்சகரிடம் மக்களை வழிநடத்த, தேவனால் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து நாடுவோம்.