Archives: நவம்பர் 2024

நம்பத்தகுந்த நமது தகப்பன்

எனது ஆறடி மூன்றங்குலம் உயரமான மகன் சேவியர், சிரித்து குறுநடை போடும் தனது குழந்தையான ஆனந்தை எளிதாக உயரே தூக்கினான். அவன் தனது மகனின் சிறிய கால்களைத் தனது பெரிய கைகளால் சுற்றிப் பிடித்து, அவற்றைத் தனது உள்ளங்கையில் உறுதியாகப் பற்றினான். தன் நீண்ட கையை நீட்டி, தன் மகன் தன்னிச்சையாக சமநிலைப்பட ஊக்குவித்தான், ஆனால் தேவைப்பட்டால் அவனைப் பிடிக்க மற்றொரு கையை தயாராக வைத்திருந்தான். ஆனந்த், கால்களை நிமிர்த்தி நின்றான். பரந்த புன்னகையுடன், கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, அவனது கண்கள் தந்தையின் பார்வையில் பதிந்தன.

நமது பரலோகத் தகப்பன் மீது கவனம் செலுத்துவதன் நன்மைகளை ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3). அவரை வேத வாக்கியங்களின் மூலம் தேடுவதற்கும், ஜெபத்தினாலும் ஆராதனையினாலும் அவருடன் இணைந்திருக்கவும் தங்களை அர்ப்பணித்திட தேவஜனங்களை அவர் ஊக்குவித்தார். அத்தகைய உண்மையுள்ளவர்கள், தகப்பனுடனான தங்கள் உறுதியான ஐக்கியத்தின் மூலம் கட்டப்பட்ட ஒரு திடமான நம்பிக்கையை அனுபவிப்பார்கள்.

தேவனின் பிரியமான பிள்ளைகளாகிய நாம், "கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்." (வ.4) என்று தைரியமாக அபயமிடலாம். ஏன்? ஏனென்றால் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதா நம்பத்தக்கவர். அவரும், அவா் வாா்த்தைகளும் ஒருபோதும் மாறாது.

நாம் நம் பரலோகத் தகப்பன் மீது நம் கண்களைப் பதிக்கும்போது, ​​அவர் நம் கால்களை அவருடைய கரங்களில் உறுதியாக வைப்பார். அவர் எப்போதும் அன்பாகவும், உண்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று நாம் உறுதி கொள்ளலாம்!

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார்.  "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில்,  அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).

"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல்  தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின்  நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில்,  நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?

நன்றாய் செலவிடப்பட்ட நேரம்

மார்ச் 14, 2019 அன்று, நாசா ராக்கெட்டுகள் தீ பிளம்புகளுடன் மேலெ எழுந்து, விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து சென்றன. கோச் 328 நாட்களுக்குப் பூமிக்குத் திரும்பாமல்,  நீண்ட தொடர்ச்சியான விண்வெளிப் பயணத்திற்கான சாதனையைப் படைத்த பெண்ணானாா். ஒவ்வொரு நாளும், பூமியிலிருந்து சுமார் 254 மைல்களுக்கு மேல் வாழும் விண்வெளி வீரரின் நேரத்தை, ஒரு திரை ஐந்து நிமிட அதிகரிப்புகளில் கண்காணிக்கும். அவளுக்கு எண்ணற்ற தினசரி பணிகள் (உணவு முதல் பரிசோதனைகள் வரை) இருந்தன, மற்றும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு சிவப்புக் கோடு திரையில் கோச் கால அட்டவணைக்கு முன்னால் இருக்கிறாரா அல்லது பின்னால் இருக்கிறாரா என்பதைத் தொடர்ந்து காட்டியது. ஒரு கணமும் வீணாகவில்லை.

நம் வாழ்க்கையில் ஊடுருவி நம்மை ஆளும் சிவப்புக் கோடு போன்ற எதையும் அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், நம்முடைய விலைமதிப்பற்ற, வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துமாறு நம்மை ஊக்குவித்தார். "ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:15-16) என்று அவர் எழுதினார். தேவனின் ஞானம் நமது நாட்களை நல்ல நோக்கங்களினாலும் அக்கறைகளாலும் நிரப்பிடவும்; அவருக்குக் கீழ்ப்படிவதைப் பயிலவும்; நமது பிறரை நேசிக்கவும்; உலகில் இயேசுவின் தொடர்ச்சியான மீட்புப் பணியில் பங்கேற்கவும் பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஞானத்தின் போதனைகளைப் புறக்கணித்து, மாறாக  நமது நேரத்தை மதியற்றவா்களாகப் பயன்படுத்துவதும் (வ. 17), சுயநலமான அல்லது அழிவுகரமான நோக்கங்களில் நம் ஆண்டுகளைக் கழிப்பதும் முற்றிலும் சாத்தியமே.

இது நேரத்தைக் குறித்து அதீத வருத்தப்படுவதற்கல்ல, மாறாகக் கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் தேவனைப் பின்பற்றுவதைக் குறித்தது. நம்முடைய நாட்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார்.