நீதிமன்றத்தில், ஒரு நபர் தேவனுக்கு எதிரான தடை உத்தரவிற்காக மனுத்  தாக்கல் செய்தார். தேவன் தன்னிடம் குறிப்பாக இரக்கமற்றவராகவும், கடுமையான எதிர்மறையான அணுகுமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தலைமை நீதிபதி, இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார். அந்த நபருக்கு நீதிமன்றத்தின் உதவி அல்ல, மாறாக அவருக்கு மனநல உதவி தேவை என்று கூறினார். இது ஒரு நகைச்சுவையான உண்மைக் கதை, ஆனால் சோகம் நிறைந்தது.

நாம் என்ன விதிவிலக்கானவர்களா? நமக்கும் சில சமயங்களில், “எனக்கு போதும் தேவனே, தயவாய் நிறுத்தும்” என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? இதையே யோபு செய்தார். அவர் தேவனை வழக்கிற்குட்படுத்தினார். சொல்லொண்ணா துயரங்களைத் தனிப்பட்ட முறையில் சகித்த பிறகு, யோபு, “தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்” (யோபு 13:3) என்கிறார், தேவனோடு நீதிமன்றத்தில் வழக்காடுவதைக் கற்பனை செய்கிறார் (9:3). “உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக” (13:21) என்று அவர் ஒரு தடை உத்தரவையும் போடுகிறார். தான் குற்றமற்றவர் என்பது மட்டும் யோபின் வழக்கு வாதம் அல்ல, ஆனால்,”நீர் என்னை ஒடுக்கி.. பார்க்கிறது நமக்கு நன்றாயிருக்குமோ?” (10:3) என்று தேவன் தன்னிடம் நியாயமற்ற கடுமையோடு இருப்பதாகப் பார்த்தார்.

சில சமயங்களில் தேவன் நியாயமற்றவர் என்பதுபோல உணர்கிறோம். உண்மையில், யோபின் கதை சிக்கலானது, எளிதான பதில்கள் அதிலில்லை. இறுதியில் தேவன் யோபுக்குண்டான அனைத்தையும் மீட்டெடுக்கிறார், ஆனால் அது எப்போதும் நமக்கான அவரது திட்டம் அல்ல. யோபுவின் இறுதி ஒப்புதலில் சில தீர்ப்பை நாம் காணலாம்: “ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” (42:3). கருப்பொருள் யாதெனில், நாம் அறியவே முடியாத காரணங்கள் தேவனிடம் உள்ளன, அதில் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது.