மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ​​ஒளிக்கு மற்றொரு  மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். “இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்” என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.

நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.

கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், “அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (வ.7) என்று குறிப்பிட்டார்.

இயேசுவே தன்னை, “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.