என் தோழியும் அவளது கணவரும் கருத்தரிக்கச் சிரமப்பட்டபோது, ​​மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அவளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால் என் தோழி தயங்கினாள். “நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க ஜெபம் போதுமல்லவா? எனக்கு உண்மையிலே மருத்துவச் சிகிச்சை அவசியமா?” எனக் கேட்டாள். தேவன் செயல்படுவதைப் பார்க்க, மனித பங்களிப்பை உணர முடியாமல் என் தோழி போராடினாள்.

இயேசு, திரளான ஜனங்களுக்கு உணவளித்த சம்பவம் இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் (மாற்கு 6:35-44). அந்த கதை எப்படி நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்திருக்கலாம்; ஆயிரக்கணக்கான மக்கள் சில அப்பம் மற்றும் மீன்களால் அற்புதமாகப் போஷிக்கப்படுகிறார்கள் (வ. 42). ஆனால் கூட்டத்திற்கு உணவளிப்பது யார் என்பதைக் கவனியுங்கள்? சீஷர்கள் (வ. 37). மேலும், யார் உணவு வழங்குகிறார்கள்? சீஷர்கள் (வ. 38). உணவை விநியோகித்து, பிறகு சுத்தம் செய்வது யார்? சீஷர்கள் (வ. 39-43). “நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்” என்று இயேசு கூறினார் (வ. 37). இயேசு அற்புதம் செய்தார், ஆனால் சீஷர்கள் செயல்பட்டபோதுதான் அது நிகழ்ந்தது.

நல்ல பயிர் என்பது தேவனின் ஈவு (சங்கீதம் 65:9-10), ஆனால் ஒரு விவசாயி நிலத்தில் உழைத்தாக வேண்டும். இயேசு, பேதுருவிடம் “மீன் அகப்படும்” என  வாக்களித்தார், ஆனால் மீனவரும் வலைகளை வீச வேண்டியிருந்தது (லூக்கா 5:4-6). தேவனால் நம்மையன்றி பூமியைப் பராமரிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் முடியும். ஆனால், பெரும்பாலும்மனிதனோடு இனைந்து செயல்படவே தேவன் விரும்புகிறார்.

என் தோழியும் சிகிச்சை பெற்று, பின்னர் வெற்றிகரமாகக் கருத்தரித்தார். இது அற்புதம் நடப்பதற்கான விதிமுறை இல்லை என்றாலும், என் தோழிக்கும் எனக்கும் இது ஒரு பாடமாக இருந்தது. தேவன் நம் கரங்களில் வழங்கியுள்ள  முறைகளைக்கொண்டே, தமது அதிசயமான கிரியைகளை அடிக்கடி செய்கிறார்.