நவம்பர் 22, 1963 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி மற்றும் கிறித்துவ விளக்க உரையாளர் சி.எஸ். லூயிஸ் ஆகியோர் மரித்தனர். முற்றிலும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட, நன்கு அறியப்பட்ட மூன்று மனிதர்கள். ஹக்ஸ்லி, ஒரு அஞ்ஞான கொள்கைவாதி, கிழக்குப் பகுதிகளின் மாய வித்தைகளில் ஈடுபாடுள்ளவர். கென்னடி, ரோம கத்தோலிக்கராக இருந்தாலும், மனிதநேயத் தத்துவத்தைக் கடைப்பிடித்தார். லூயிஸ் ஒரு முன்னாள் நாத்திகர் ஆவார், அவர் ஒரு ஆங்கிலிகன் என்ற முறையில் இயேசுவை வெளிப்படையாகப் பகிரும் விசுவாசி. மரணம் என்பது நபர்களை மதிப்பதில்லை, ஆகையால் நன்கு அறியப்பட்ட இந்த மூன்று மனிதர்களும் மரணத்துடனான தங்கள் நியமனத்தை ஒரே நாளில் எதிர்கொண்டனர்.

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3) கீழ்ப்படியாதபோது, மனித வாழ்க்கை அனுபவத்தில் மரணம் நுழைந்ததாக வேதாகமம் கூறுகிறது. இது மனித வரலாற்றில் உண்டான சோகமான உண்மை. மரணம் என்பது ஒரு பெரிய சமத்துவவாதி. அல்லது, யாரோ ஒருவர் சொன்னது போல், எவராலும் தவிர்க்க முடியாத நியமனம் இது. எபிரேயர் 9:27-ன் சத்தியமும் இதுதான், “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று நாம் வாசிக்கிறோம்.

மரணத்துடனான நமது சொந்த நியமனம் பற்றிய நம்பிக்கையை நாம் எங்கே பெறலாம்? மரணத்திற்குப் பின்பாக என்னவாகும்? கிறிஸ்துவில் மட்டுமே. ரோமர் 6:23, இந்த சத்தியத்தை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” தேவனுடைய இந்த ஈவு  எப்படிக் கிடைத்தது? தேவகுமாரனாகிய இயேசு, மரணத்தை அழிப்பதற்காக மரித்தார், நமக்கு ஜீவனையும் அழியாமையையும் (2 தீமோத்தேயு 1:10) அளிக்கக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.