நெதர்லாந்தில் குளிர்காலம் அரிதாகவே நிறையப் பனியைக் கொண்டுவருகிறது, ஆனால் கால்வாய்கள் உறைந்து போகும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். என் கணவர், டாம், அங்கு வளர்ந்து கொண்டிருந்தபோது, அவரது பெற்றோருக்கு ஒரு குடும்ப சட்டம் இருந்தது: “குதிரையின் எடையைத் தாங்கும் அளவில் பனிக்கட்டி இல்லையென்றால், அதை விட்டு விலகி இருங்கள்”. குதிரைகள் தங்கள் இருப்புக்கான தடயங்களை விட்டுச் செல்லும் என்பதால், டாம் மற்றும் அவரது நண்பர்கள் சாலையிலிருந்து கொஞ்சம் குதிரையின் சானத்தை எடுத்து அதை மெல்லிய பனிக்கட்டி மீது எறிந்து, குடும்பச் சட்டத்தை மீறி மேற்பரப்பில் மேலே ஏறிச் சென்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, அவர்கள் செயலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதை அவர்கள் தங்கள் இதயங்களில் அறிந்திருந்தனர்.
கீழ்ப்படிதல் எப்போதும் இயல்பாக வருவதில்லை. கீழ்ப்படிவதா அல்லது வேண்டாமா என்ற விருப்பம், கடமை உணர்வு அல்லது தண்டனை பற்றிய பயத்திலிருந்தும் உருவாகலாம். ஆனால் நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையும் இருப்பதாலும் கீழ்ப்படிவதைத் தெரிவு செய்யலாம்.
யோவான் 14 இல், இயேசு தம் சீடர்களுக்கு அறைகூவல் விடுத்தார், “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,. . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (வ. 23-24). கீழ்ப்படிவது எப்போதுமே எளிதான விருப்பம் அல்ல. ஆனால் நமக்குள் வாழும் ஆவியானவரின் வல்லமை, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் திராணியையும் அளிக்கிறது (வ. 15-17). அவருடைய உதவியால், நம்மை மிகவும் நேசிப்பவரின் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இது தண்டனை பயத்தால் அல்ல, மாறாக அன்பினால்.
எந்த வழிமுறைகளில் நீங்கள் அறிந்தே கீழ்ப்படியவில்லை? கடினமாக இருந்தாலும் அல்லது சிரமமாக இருந்தாலும் நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவது ஏன் அவசியம்?
அன்பு தேவனே, உமது கற்பனைகளுக்குச் செவிகொடுக்க என் கடின உள்ளத்தை மென்மையாக்கிடும். எனது சொந்த செயல்திட்டங்களை ஒதுக்கி வைத்து, உமக்கு உண்மையாகக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.