அடுமணை (ரொட்டி சுடுதல்) உதவியாளரான உஷா, முந்திரிப்பழ ரொட்டியைத் திருடுவதாக அவரது மேற்பார்வையாளர் குற்றம் சாட்டியபோது, தன்னைத் தற்காத்துக் கொள்ள மிகவும் உதவியற்றவராக உணர்ந்தார். ஆதாரமற்ற தீர்ப்பு மற்றும் அதற்கான சம்பளப் பிடித்தம் ஆகியவை அந்த மேற்பார்வையாளரின் பல தவறான செயல்களில் இரண்டு மட்டுமே. “தேவனே, தயவாய் உதவும். அவளின் கீழ் வேலை செய்வது மிகவும் கடினம், ஆனால் எனக்கு இந்த வேலை தேவை”, என உஷா ஒவ்வொரு நாளும் ஜெபித்தாள்.
இதேபோல் உதவியற்றவளாக உணர்ந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு கூறுகிறார், அவள் “எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும்” (லூக்கா 18:3) என்றிருந்தாள். தன் வழக்கைத் தீர்க்க அதிகாரம் உள்ள ஒரு நீதிபதியிடம் சென்றாள். அந்த நீதிபதி அநியாயம் செய்பவர் என்று தெரிந்திருந்தும், அவரை அணுகுவதில் விடாப்பிடியாக இருந்தாள்.
நீதிபதியின் இறுதி பதில் (வ.4-5) அன்புடனும் உதவியுடனும் விரைவாகப் பதிலளிக்கும் (வ.7) நம் பரலோகத் தகப்பனிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. விடாமுயற்சி, ஒரு அநீதியான நீதிபதி ஒரு விதவையின் வழக்கை விசாரிக்க செய்யக்கூடும் என்றால், நீதியுள்ள நீதிபதியாக இருக்கும் தேவன் நமக்காக எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியும்? (வ.7-8). “தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” (வ.7) என்று நாம் அவரை நம்பலாம். மேலும், ஜெபிப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பது நமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். நம்முடைய சூழ்நிலைக்கு, தேவன் தமது பரிபூரண ஞானத்தின்படி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதால் நாம் தொடா்ந்து நிலைத்திருக்கிறோம்.
இறுதியில், உஷாவின் மேற்பார்வையாளர் மற்ற பணியாளர்கள் தனது நடத்தையைப் பற்றி புகார் செய்ததை அடுத்து ராஜினாமா செய்தார். நாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது; நம்முடைய ஜெபங்களின் வல்லமையானது, அதனைக் கேட்டு நமக்கு உதவுகிறவரிடமே இருக்கிறது என்பதை அறிந்து, ஜெபிப்பதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.
நீங்கள் எப்போது ஜெபிப்பதை விட்டுவிட வேண்டும் என்று உணர்ந்தீர்கள்? நீங்கள் ஜெபிக்கும்போது தேவனின் தன்மையை நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்க முடியும்?
அன்பு தேவனே, தயவாய் நீர் யார் என்பதை எனக்கு நினைவூட்டும், என்ன நடந்தாலும் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவும்.