இரண்டாம் உலகப் போரின் போது, ​​அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் படை வீரர் லின் வெஸ்டன், எதிரிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவுகளைத் தாக்கியபோது கடற்படையினருடன் கரைக்குச் சென்றார். தவிர்க்க முடியாமல், பயங்கர உயிரிழப்புகள் ஏற்பட்டன. காயமுற்ற வீரர்களை வெளியேற்ற, அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவரது படையினர் மோசமான வயிற்றுக் காயத்துடன் இருந்த எதிரி வீரனைச் சந்திக்க நேர்ந்தது. காயத்தின் தன்மை காரணமாக, அவனுக்குத் தண்ணீர் கொடுக்க இயலவில்லை. அவனை உயிருடன் காப்பாற்ற, சிறிய அதிகாரியான வெஸ்டன், நரம்பு வழியாக பிளாஸ்மாவை (இரத்தத் திரவம்) செலுத்தினார்.

“அந்த பிளாஸ்மாவை நம் ஆட்களுக்குச் சேமித்து வை, ஸ்வாபி(மாலுமி)!” என்று கடற்படை வீரர்களில் ஒருவன் கத்தினான். கடைநிலை அதிகாரி வெஸ்டன் அவனைப் புறக்கணித்தார். இயேசு என்ன செய்வார் என்பதை அவர் அறிந்திருந்தார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” (மத்தேயு 5:44). இயேசு, அந்த சவாலான வார்த்தைகளில் சொன்னதைக் காட்டிலும் அதிகம் செய்தார்; அவர் அதனை வாழ்ந்து காட்டினார். அவரை பகைத்த கூட்டம், அவரைப் பிடித்து, பிரதான ஆசாரியனிடம் அழைத்துச் சென்றபோது, ​​”இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்(தனர்)து” (லூக்கா 22:63). போலியான நியாயவிசாரணைகள் மற்றும் மரணதண்டனை மூலம் அவர்களின் துஷ்பிரயோகம் தொடர்ந்தது. இயேசு அதைச் சகிக்க மட்டும் செய்யவில்லை, ரோமானிய வீரர்கள் அவரை சிலுவையில் அறைந்தபோது, ​​அவர்களின் மன்னிப்புக்காக ஜெபித்தார் (23:34).

நம்மை உண்மையாகக் கொல்ல முயலும் எதிரியை நாம் சந்திக்காமலிருந் திருக்கலாம். ஆனால் ஏளனத்தையும், பரியாசத்தையும் சகிப்பது எப்படிப்பட்டதென்று அனைவரும் அறிவோம். கோபத்தில் பதிலளிப்பதே நமது இயல்பான எதிர்வினை. ஆனால், “உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44) என்று இயேசு மாற்றியமைத்தார்.

இன்று, இயேசு செய்ததைப் போல, நம் எதிரிகளிடமும் கருணை காட்டி, அத்தகைய அன்போடு வாழ்வோம்.