ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி, கைகளை அசைத்த தன் மகனிடம், என் தோழி “கீழே இறங்கு” என்று சற்றே அதட்டினாள். “போதகர் என்னைப் பார்க்க வேண்டும். நான் நிற்காவிட்டால், அவர் என்னைப் பார்க்க மாட்டார்” என்று அவன் வெகுளியாகப் பதிலளித்தான்.
ஆலயத்தில் தன் இருக்கை மீது ஏறி நிற்பதை பெரும்பாலான தேவாலயங்களில் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றாலும், என் தோழியின் மகனுடைய கருத்து ஏற்புடையதே. நின்று, கைகளை அசைப்பது நிச்சயமாகப் போதகரின் பார்வையையும், கவனத்தையும் ஈர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
நாம் தேவனின் கவனத்தைப் பெற முயலுகையில், அவரால் கவனிக்கப்படுவதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேவன் நம் ஒவ்வொருவரையும் எப்போதும் பார்க்கிறார். ஆகார், தன் வாழ்வில் மிகத் தாழ்ந்த, தனிமையான, மிகவும் விரக்தியான நேரத்தில் இருக்கையில், அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தியவரும் அவரே. அவள் ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு, ஒரு குமாரனைப் பெறும்படியாக ஆபிராமுக்கு அவனுடைய மனைவி சாராயால் கொடுக்கப்பட்டிருந்தாள் (ஆதியாகமம் 16:3). அவள் கருவுற்றபோது, ஆகாரை தன் மனைவி தவறாக நடத்த ஆபிராம் அனுமதித்தார்: “அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்” (வ.6).
ஓடிப்போன அடிமை தன்னை ஒண்டியாகவும், கர்ப்பமாகவும், பரிதவிக்கத்தக்கவளாகவும் கண்டாள். ஆயினும், வனாந்தரத்தில் அவளது விரக்தியின் மத்தியில், தேவன் மனமுருகி அவளிடம் பேச ஒரு தூதனை அனுப்பினார். தேவதூதன் அவளிடம், “கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்(ட்டார்)டபடியினால்” (வ.11) என்றார். அவள், “நீர் என்னைக் காண்கிற தேவன்” (வ.13) என்று பதிலளித்தாள்.
வனாந்தரத்தின் மத்தியில், இது மிகப்பெரும் புரிதலாகும். தேவன் ஆகாரைக் கண்டு இரக்கம் கொண்டார். நிலைமை எவ்வளவு கடினமான இருந்தாலும், அவர் உங்களைப் பார்க்கிறார்.
நீங்கள் எத்தகைய வனாந்தரம் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கிறீர்கள்? தேவன் உங்களைக் காண்கிறார் என்பதை அறிவது; தொடர்ந்து முன்னேற உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
அன்பு தேவனே, என்னைக் காண்பதற்காக நன்றி. என்னுடைய கடினமான நேரங்களிலும் நீர் என்னுடன் இருப்பதை நான் அறிவேன்.