கீதா முதன்முதலில் சென்னையில் காபி கடையில் வேலையைத் தொடங்கியபோது, அவள் மாலா என்ற வாடிக்கையாளருக்குச் சேவை செய்தாள். மாலா காது கேளாதவர் என்பதால், அவர் தனது தொலைப்பேசியில் தட்டச்சு செய்யப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பொருட்களை ஆர்டர் செய்தார். மாலா ஒரு வழக்கமான வாடிக்கையாளர் என்பதை கீதா அறிந்த பிறகு, போதுமான சைகை மொழியைக் கற்று, அவருக்குச் சிறப்பாகச் சேவை செய்யத் தீர்மானித்தாள், அதனால் அவர் அதை எழுதாமலேயே ஆர்டர் செய்யலாம்.
ஒரு எளிய முறையில், கீதா மாலாவுக்கு அன்பையும் சேவையையும் காட்டினாள். இதையே பேதுரு, ஒருவருக்கொருவர் வழங்க நம் அனைவரையும் ஊக்குவிக்கிறார். சிதறடிக்கப்பட்ட மற்றும் நாடுகடத்தப்பட்ட இயேசுவின் விசுவாசிகளுக்கு எழுதிய நிருபத்தில், “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்றும், தங்கள் ஈவுகளைப் பயன்படுத்தி “ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” (1 பேதுரு 4:8, 10) என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகிறார். தேவன் நமக்கு அளித்திருக்கும் தாலந்துகள் மற்றும் திறன்கள் எதுவாக இருந்தாலும், அவை பிறருக்கு நன்மை செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய ஈவுகளே. அவ்வாறு செய்யும்போது, நம் வார்த்தைகளும் செயல்களும் தேவனுக்கு கனத்தைச் சேர்க்கும்.
பேதுருவின் வார்த்தைகள், அவர் எழுதியவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது, காரணம் அவர்கள் வேதனையும் தனிமையும் நிறைந்த காலத்தை அனுபவித்தனர். துன்பத்தின் போது ஒருவரையொருவர் தங்கள் சோதனைகளைச் சமாளிக்க, ஒருவருக்கொருவர் உதவுமாறு அவர் அவர்களை உற்சாகப்படுத்தினார். மற்றொரு நபர் அனுபவிக்கும் குறிப்பிட்ட வலியை நாம் அறியாவிட்டாலும், நம்முடைய வார்த்தைகள், நம்மிடம் உள்ளவை மற்றும் நமது திறன்கள் மூலம் ஒருவரையொருவர் கருணையோடும் மகிழ்ச்சியோடும் சேவிக்கத் தேவன் நமக்கு உதவுவார். அவருடைய அன்பின் பிரதிபலிப்பாக மற்றவர்களுக்கு ஊழியம் செய்யத் தேவன் நமக்கு உதவிடுவாராக.
பேதுரு ஊக்குவிக்கும் உபசரிப்பை நீங்கள் எப்போது அனுபவித்தீர்கள்? இன்று உங்கள் வார்த்தைகள், திறமைகள் மற்றும் உங்களுக்கானவற்றைக் கொண்டு நீங்கள் யாருக்குச் சேவை செய்திட முடியும்?
தகப்பனே, நீர் எனக்கு அருளிய அனைத்தையும் கொண்டு என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குச் சேவை செய்ய எனக்கு உதவும்.