எனது ஆறடி மூன்றங்குலம் உயரமான மகன் சேவியர், சிரித்து குறுநடை போடும் தனது குழந்தையான ஆனந்தை எளிதாக உயரே தூக்கினான். அவன் தனது மகனின் சிறிய கால்களைத் தனது பெரிய கைகளால் சுற்றிப் பிடித்து, அவற்றைத் தனது உள்ளங்கையில் உறுதியாகப் பற்றினான். தன் நீண்ட கையை நீட்டி, தன் மகன் தன்னிச்சையாக சமநிலைப்பட ஊக்குவித்தான், ஆனால் தேவைப்பட்டால் அவனைப் பிடிக்க மற்றொரு கையை தயாராக வைத்திருந்தான். ஆனந்த், கால்களை நிமிர்த்தி நின்றான். பரந்த புன்னகையுடன், கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, அவனது கண்கள் தந்தையின் பார்வையில் பதிந்தன.

நமது பரலோகத் தகப்பன் மீது கவனம் செலுத்துவதன் நன்மைகளை ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3). அவரை வேத வாக்கியங்களின் மூலம் தேடுவதற்கும், ஜெபத்தினாலும் ஆராதனையினாலும் அவருடன் இணைந்திருக்கவும் தங்களை அர்ப்பணித்திட தேவஜனங்களை அவர் ஊக்குவித்தார். அத்தகைய உண்மையுள்ளவர்கள், தகப்பனுடனான தங்கள் உறுதியான ஐக்கியத்தின் மூலம் கட்டப்பட்ட ஒரு திடமான நம்பிக்கையை அனுபவிப்பார்கள்.

தேவனின் பிரியமான பிள்ளைகளாகிய நாம், “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.” (வ.4) என்று தைரியமாக அபயமிடலாம். ஏன்? ஏனென்றால் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதா நம்பத்தக்கவர். அவரும், அவா் வாா்த்தைகளும் ஒருபோதும் மாறாது.

நாம் நம் பரலோகத் தகப்பன் மீது நம் கண்களைப் பதிக்கும்போது, ​​அவர் நம் கால்களை அவருடைய கரங்களில் உறுதியாக வைப்பார். அவர் எப்போதும் அன்பாகவும், உண்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று நாம் உறுதி கொள்ளலாம்!