மார்ச் 14, 2019 அன்று, நாசா ராக்கெட்டுகள் தீ பிளம்புகளுடன் மேலெ எழுந்து, விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து சென்றன. கோச் 328 நாட்களுக்குப் பூமிக்குத் திரும்பாமல்,  நீண்ட தொடர்ச்சியான விண்வெளிப் பயணத்திற்கான சாதனையைப் படைத்த பெண்ணானாா். ஒவ்வொரு நாளும், பூமியிலிருந்து சுமார் 254 மைல்களுக்கு மேல் வாழும் விண்வெளி வீரரின் நேரத்தை, ஒரு திரை ஐந்து நிமிட அதிகரிப்புகளில் கண்காணிக்கும். அவளுக்கு எண்ணற்ற தினசரி பணிகள் (உணவு முதல் பரிசோதனைகள் வரை) இருந்தன, மற்றும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு சிவப்புக் கோடு திரையில் கோச் கால அட்டவணைக்கு முன்னால் இருக்கிறாரா அல்லது பின்னால் இருக்கிறாரா என்பதைத் தொடர்ந்து காட்டியது. ஒரு கணமும் வீணாகவில்லை.

நம் வாழ்க்கையில் ஊடுருவி நம்மை ஆளும் சிவப்புக் கோடு போன்ற எதையும் அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், நம்முடைய விலைமதிப்பற்ற, வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துமாறு நம்மை ஊக்குவித்தார். “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” (எபேசியர் 5:15-16) என்று அவர் எழுதினார். தேவனின் ஞானம் நமது நாட்களை நல்ல நோக்கங்களினாலும் அக்கறைகளாலும் நிரப்பிடவும்; அவருக்குக் கீழ்ப்படிவதைப் பயிலவும்; நமது பிறரை நேசிக்கவும்; உலகில் இயேசுவின் தொடர்ச்சியான மீட்புப் பணியில் பங்கேற்கவும் பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஞானத்தின் போதனைகளைப் புறக்கணித்து, மாறாக  நமது நேரத்தை மதியற்றவா்களாகப் பயன்படுத்துவதும் (வ. 17), சுயநலமான அல்லது அழிவுகரமான நோக்கங்களில் நம் ஆண்டுகளைக் கழிப்பதும் முற்றிலும் சாத்தியமே.

இது நேரத்தைக் குறித்து அதீத வருத்தப்படுவதற்கல்ல, மாறாகக் கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் தேவனைப் பின்பற்றுவதைக் குறித்தது. நம்முடைய நாட்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார்.