ராஜேஷ் தனது மூன்றாண்டு படிப்புக்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்து, மலிவான விடுதி அறையை தேர்ந்தேடுத்தபோது, தன் செயலின் விளைவை அறியவில்லை. “அது பயங்கரமாக இருந்தது, அறையும் அதன் குளியலறையும் மிக மோசமாக இருந்தன” என்று அவர் விவரித்தார். ஆனால் அவரிடம் கொஞ்சப் பணமே இருக்க, வேறு வழியில்லை. “என்னால் இயன்றதெல்லாம் மூன்று ஆண்டுகளில் திரும்பிச் செல்ல எனக்கு ஒரு நல்ல வீடு உண்டு, எனவே நான் இங்கேயே தங்கி எனது நேரத்தை நன்றாகப் பயன்படுத்துவேன்” என்று அவர் நிச்சயித்துக்கொண்டதாகக் கூறினார்.
ராஜேஷின் கதை, “பூமிக்குரிய கூடாரமாகிய” (2 கொரிந்தியர் 5:1) மரிக்கக்கூடிய உடலில் வாழ்வதற்கான அன்றாட சவால்களைப் பிரதிபலிக்கிறது, இவ்வுடல் “ஒழிந்துபோம்” (1 யோவான் 2:17) உலகில் இயங்குகிறது. வாழ்க்கை நம்மீது வீசும் பல சிரமங்களைச் சமாளிக்கப் போராடி, இவ்வாறு “நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:4)
ஒரு நாள் நாம் அழியாத, உயிர்த்தெழுந்த சரீரத்தைப் பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கைதான் நம்மைத் தொடர்ந்து நடத்துகிறது; அது “நம்முடைய பரம வாசஸ்தலம்” (வ. 4). இப்போது இருக்கும் புலம்பலும் விரக்தியும் இல்லாத உலகில் வாழ்வோம் (ரோமர் 8:19 -22). இந்த நம்பிக்கைதான் தேவன் அன்பாய் வழங்கியிருக்கும் இந்த நிகழ்கால வாழ்க்கையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நமக்கு உதவுகிறது. அவர் நமக்குக் கொடுத்திருக்கும் வளங்களையும் திறமைகளையும் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார், அதனால் நாம் அவருக்கும் பிறருக்கும் ஊழியம் செய்யலாம். “அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.” (வ. 9).
ஒவ்வொரு நாளையும் தேவன் பேரில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நினைவூட்டும்படிக்கு எவ்வாறு துவங்குவீர்கள்? இந்த நம்பிக்கையுடன் நீங்கள் எவ்வாறு பிறரை ஊக்கப்படுத்தலாம்?
தகப்பனே, உமது பரலோக வீட்டில் உம்முடன் இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இந்த நம்பிக்கை எனக்கு அளிக்கும் வாக்குத்தத்தத்திற்கும் வலிமைக்கும் உமக்கு நன்றி