விமானப் பணிப்பெண் ஒருவர் உள்நாட்டு விமானத்திற்கான தனது முன்னோட்டச் சோதனைகளை மேற்கொண்டபோது, ​​ஒரு பயணி ஒருவர், பயணத்தைப் பற்றி கவலையுடனும் பயத்துடனும் இருப்பதைக் கண்டார். அவளுக்கு அருகே அமர்ந்து, அவள் கையைப் பிடித்து, விமானச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கி, அவள் பத்திரமாக இருக்கிறாள் என்று அவளைச் சமாதானப்படுத்தினார். “நீங்கள் ஒரு விமானத்தில் ஏறினால், அதின் காரியம் எங்களைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குச் சௌகரியமாக இல்லை என்றால்,  ‘என்னவாயிற்று? என்னால் ஏதாவது செய்ய முடியுமா?’ என்று நான் உதவ விரும்புகிறேன்” என்றார்.  இந்த கரிசனையான அக்கறை, தம்மை விசுவாசிக்கிறவர்களுக்காகப் பரிசுத்த ஆவியானவர் என்ன செய்வார் என்று இயேசு சொன்னதைப் பற்றிய ஒரு சித்திரமாக இருக்கலாம்.

கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவை ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பதற்கு அவசியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது, ஆனால் அது சீடர்களின் இதயங்களில் உணர்ச்சி பெருக்கத்தையும் ஆழ்ந்த துக்கத்தையும் உருவாக்கும் (யோவான் 14:1). எனவே உலகில் தனது பணியை நிறைவேற்ற அவர்கள் தனித்து விடப்பட மாட்டார்கள் என்று அவர்களுக்கு உறுதியளித்தார். “என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை” (வ. 16), அவர் அவர்களுடன் இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். ஆவியானவர் இயேசுவை குறித்து சாட்சி கொடுத்து, கிறிஸ்து செய்த மற்றும் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுவார் (வ. 26). கடினமான காலங்களில் அவர்கள் அவரால் “ஆறுதல்” (அப்போஸ்தலர் 9:31) அடைவர்.

இந்த வாழ்க்கையில் அனைவரும் (கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் உட்பட) கவலை, பயம் மற்றும் துக்கத்தின் கொந்தளிப்பை அனுபவிப்பார்கள். ஆனால் அவர் இல்லாத நிலையில், நமக்கு ஆறுதல் அளிக்கப் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்று அவர் வாக்களித்துள்ளார்.