“மகிழ்ச்சியின் வேகத்தில் செல்லுங்கள்” ஒரு நாள் காலையில் வரவிருக்கும் ஆண்டை குறித்து நான் ஜெபத்துடன் சிந்தித்தபோது, இந்த வாக்கியம் என் மனதில் பட்டது, அது பொருத்தமானதாகத் தோன்றியது. எனக்கு அதிக வேலை செய்யும் நாட்டம் இருந்தது, அது என் மகிழ்ச்சியை அடிக்கடி பறித்தது. எனவே, இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, நண்பர்கள் மற்றும் சநதோஷகாரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில், வரும் ஆண்டில் மகிழ்ச்சிகரமான வேகத்தில் பணியாற்ற நிச்சயித்தேன்.

இந்த திட்டம் பலன் கொடுத்தது; மார்ச் வரை! பின்னர் நான் உருவாக்கும் ஒரு பாடத் திட்டத்தின் சோதனையை மேற்பார்வையிட ஒரு பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தேன். மாணவர் சேர்க்கை மற்றும் பாடம் தயாரித்தல் என்று  நான் விரைவில் நீண்ட நேரம் உழைத்தேன். இப்போது நான் எப்படி மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வேன்?

இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களுக்குச் சந்தோஷத்தை வாக்களிக்கிறார், அது அவருடைய அன்பில் நிலைத்திருப்பதன் மூலமும் (யோவான் 15:9) ஜெபத்துடன் நம்முடைய தேவைகளை அவரிடம் கொண்டு செல்வதன் மூலமும் வருகிறது என்று கூறுகிறார் (16:24). “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (15:11) என்கிறார். இந்த மகிழ்ச்சி அவருடைய ஆவியானவர் மூலம் ஒரு கனியாக வெளிப்படுகிறது, அவருடன்தான் நாம் நடக்க வேண்டும் (கலாத்தியர் 5:22-25). ஒவ்வொரு இரவும் இளைப்பாறுதலான, நம்பிக்கையான ஜெபத்தில் நேரத்தைச் செலவழித்தபோதுதான் என்னுடைய வேலை மிக்க காலத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

மகிழ்ச்சி மிகவும் அவசியமானதால், நமது முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஞானமுள்ள காரியம். ஆனால் வாழ்க்கை முழுவதுமாக நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், மகிழ்ச்சியின் மற்றொரு ஆதாரமான ஆவியானவர் நமக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, இப்போது மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வது என்பது ஜெபத்தின் வேகத்தில் செல்வதைக் குறிக்கிறது; மகிழ்ச்சியைத்  தருபவரிடமிருந்து பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குவதாகும்