ஆண்ட்ரூவின் கார் நிறுத்தப்பட்டது, காவலர்கள் கடந்து வந்தனர். அவர் முன்பு பலமுறை செய்ததுபோல இப்போதும், “தேவனே, நீர் பூமியிலிருந்தபோது குருடர்களைப் பார்க்கச் செய்தீர். இப்போது, தயவு செய்து இந்த பார்வையைக் குருடாக்கும்” என்று ஜெபித்தார். பாதுகாவலர்கள் காரைச் சோதனையிட்டனர், சாமான் பைகளிலிருந்த வேதாகமங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எல்லையைத் தாண்டி, வேதாகமத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியாதவர்களிடம் அதனை எடுத்துச் சென்றார்.
ஆண்ட்ரூ வான் டெர் பிஜில், அல்லது சகோதரர் ஆண்ட்ரூ. கிறிஸ்தவத்தைச் சட்டவிரோதமாக்கிய நாடுகளுக்கு வேதத்தை எடுத்துச் செல்லவேண்டும் என்ற சாத்தியமற்றது போல் தோன்றிய பணிக்காகத் தேவன் அவரை அழைத்தபோது தேவனின் வல்லமையை நம்பியிருந்தார். “நான் மிகவும் சாதாரணமானவன்” என்று அவர் தனது குறுகிய கல்வியறிவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிட்டார். “நான் செய்ததை, யார் வேண்டுமானாலும் செய்யலாம்” என்றவரது இன்றைய ஸ்தாபனம்தான் ஓபன் டோர்ஸ் இன்டர்நேஷனல், உலகம் முழுவதும் உபாத்திரவப்படும் இயேசுவின் விசுவாசிகளுக்கு ஊழியம் செய்கிறது.
யூதாவின் ஆளுநரான செருபாபேல், யூதர்களின் சிறையிருப்பிற்குப் பின், ஆலயத்தை மீண்டும் கட்டுவது சாத்தியமற்றதாக தோன்றியபோது, அவர் ஊக்கம் இழந்தார். ஆனால் தேவன் மனித பலத்தையோ பராக்கிரமத்தையோ நம்பாமல், தம்முடைய ஆவியின் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருக்கு நினைவூட்டினார் (சகரியா 4:6). சகரியா தீர்க்கதரிசிக்கு அருகாமையில் உள்ள ஒலிவ மரங்களிலிருந்து எண்ணெய் கொண்டு வரப்பட்ட விளக்குகளின் தரிசனத்தின் மூலம் அவர் அவரை ஊக்கப்படுத்தினார் (வ. 2-3). தொடர்ச்சியான எண்ணெய் விநியோகத்தின் காரணமாக விளக்குகள் எரிவது போல, செருபாபேலும் இஸ்ரவேலர்களும் தேவனின் தொடர்ச்சியான வல்லமையை நம்பி அவருடைய வேலையைச் செய்ய முடியும்.
நாம் தேவனைச் சார்ந்திருக்கும்போது, நாம் அவரை நம்பி, அவர் நாம் செய்யும்படி அழைப்பதைச் செய்வோம்.
தேவனின் ஆவியை நீங்கள் எவ்வாறு சார்ந்துகொள்ளலாம்? விளக்குகளுக்கு எண்ணெய் வழங்கும் ஒலிவ மரங்களின் தரிசனம் எவ்வாறு உங்களை ஊக்குவிக்கும்?
பரிசுத்த ஆவியானவரே, தயவுசெய்து உம்மைச் சார்ந்திருக்க எனக்கு உதவும்.