மிச்சிகன் மாநிலத்தில் 40 லட்சம் மரங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மிகவும் சாதாரணமானவை. ஆயினும்கூட, மாநிலம் ஆண்டுதோறும் “பெரிய மர வேட்டையை” நடத்துகிறது, இது பழமையான மற்றும் மிகப்பெரிய மரங்களை அடையாளம் காணும் ஒரு போட்டியாகும், அவை வாழும் அடையாளமாக மதிப்பூட்டப்படலாம். போட்டியானது சாதாரண மரங்களை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது: எந்த வனத்தின் உள்ளேயும் ஒரு வெற்றியாளர் இருக்கலாம், கவனிக்கப்படுவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.

அநேகரை போலல்லாமல், தேவன் எப்போதும் சாதாரணமானவர்களைக் கவனிக்கிறார். பிறர் புறக்கணிக்கும் எதையும், எவரையும் குறித்து அவர் அக்கறை காட்டுகிறார். யெரொபெயாமின் ஆட்சியின் போது தேவன் ஆமோஸ் என்ற சாதாரண மனிதனை இஸ்ரேலுக்கு அனுப்பினார். ஆமோஸ் தனது மக்களைத் தீமையிலிருந்து திரும்பவும் நீதியை நடப்பிக்கவும் அறிவுறுத்தினார், ஆனால் ஒதுக்கப்பட்டும், அமைதி காக்கும்படியும் கடிந்துகொள்ளப்பட்டார். “தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு” (ஆமோஸ் 7:12) என்று ஏளனமாக சொன்னார்கள். அதற்கு ஆமோஸ், “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்” (வ. 14-15) என்றார்.

ஆமோஸ் ஒரு சாதாரண மேய்ப்பனாக இருந்தபோது, ​​மந்தைகளையும் மரங்களையும் கவனித்துக் கொண்டிருந்தபோது தேவன் அவரை அறிந்தும் கவனித்துமிருந்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தி மற்றும் காட்டத்தி மரங்களுக்கு அருகேயிருந்த சாதாரண நாத்தான்வேல்  (யோவான் 1:48) மற்றும் சகேயு (லூக்கா 19:4-5) ஆகியோரை இயேசு கவனித்து அழைத்தார். நாம் எவ்வளவு மறைக்கப்பட்டவர்களாக உணர்ந்தாலும், அவர் நம்மைப் பார்க்கிறார், நம்மை நேசிக்கிறார், அவருடைய நோக்கங்களுக்காக நம்மைப் பயன்படுத்துகிறார்.