நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் “அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை” என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் “மகிழ்ச்சி” என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). “கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு” “அப்படிச் சொல்லக்கடவர்கள்” (வ. 2 ,3), “அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக” (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே “தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று” (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.
கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார்.
தேவன் உங்கள் உடைந்த உள்ளத்தை எவ்வாறு குணப்படுத்தினார்? அவர் உங்களுக்கு ஆறுதல் அளிக்க மற்றொருவரின் கதையை எவ்வாறு பயன்படுத்தினார்?
அன்பு இயேசுவே, என்னைக் குணப்படுத்தியதற்கும், உமது மீட்கும் அன்பிடம் பிறரை நடத்த என் கதையைப் பயன்படுத்தியதற்கும் நன்றி.