வேலையில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கக்கூடுமா என்று கேட்டபோது, ​​நான் மாட்டேன் என்று சொல்ல விரும்பினேன். நான் தடைகளைப் பற்றி யோசித்து, அவற்றைக் கையாள நான் தகுதியானவனல்ல என்று உணர்ந்தேன். ஆனால் நான் ஜெபித்து, வேதாகமம் மற்றும் பிற விசுவாசிகளிடமிருந்தும் வழிகாட்டுதலை நாடியபோது, ​​ஆம் என்று சொல்லத் தேவன் என்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தேன். வேதாகமத்தின் மூலம், அவருடைய உதவி எனக்கும் உறுதியளிக்கப்பட்டது. எனவே, நான் பணியை ஏற்றுக்கொண்டேன், ஆனால் இன்னும் கொஞ்சம் பயமிருந்தது.

இஸ்ரவேலர்களிலும், கானானைச் சுதந்தரிப்பதிலிருந்து பின்வாங்கிய பத்து வேவுக்காரர்களிலும் நான் என்னைக் காண்கிறேன் (எண் 13:27-29, 31-33; 14:1-4). அவர்களும் கஷ்டங்களைக் கண்டு, எவ்வாறு தேசத்தில் உள்ள பலசாலிகளைத் தோற்கடித்து, அவர்களுடைய அரணான பட்டணங்களைக் கைப்பற்றுவது என்று யோசித்தார்கள். “நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம்” (13:33) என்று வேவுக்காரர் கூறினர், மேலும் இஸ்ரவேலர்கள், “நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும்.. கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன?” (14:3) என்று முறுமுறுத்தார்கள்.

கானானைத் தம்முடைய மக்களுக்குக் கொடுப்பதாக தேவன் ஏற்கனவே வாக்களித்திருந்ததை காலேபும் யோசுவாவும் மட்டுமே நினைவு கூர்ந்தனர் (ஆதியாகமம் 17:8; எண்ணாகமம் 13:2). அவருடைய வாக்குத்தத்தத்திலிருந்து அவர்கள் நம்பிக்கை பெற்றனர், எனவே தேவனின் பிரசன்னம் மற்றும் உதவியின் வெளிச்சத்தில் வரவிருக்கும் சிரமங்களை முன்னோக்கினர். அவருடைய வல்லமை, பாதுகாப்பு மற்றும் போஷிப்பில் அவர்கள் எதிரியின் எதிர்ப்பை எதிர்கொள்வார்கள், அவர்களுடைய சுயத்தில் அல்ல (எண்ணாகமம் 14:6-9).

தேவன் எனக்குக் கொடுத்த பணியும் எளிதானது அல்ல; ஆனால் அதினுடே அவர் எனக்கு உதவினார். அவருடைய நிர்ணயங்களில் நாம் எப்போதும் சிரமங்களைத் தவிர்க்க முடியாது என்றாலும், காலேப் மற்றும் யோசுவாவைப் போல, “கர்த்தர் நம்மோடே இருக்கிறார்” (வ.9) என்பதை அறிந்து நாம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.