ஆப்கானிஸ்தானில் ஒரு கடுமையான சுற்றுப்பயணத்தின் பின், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஸ்காட் மனமுடைந்து போனார். “நான் ஒரு இருண்ட இடத்திலிருந்தேன்” என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் “இயேசுவைக் கண்டடைந்து,  அவரைப் பின்தொடர ஆரம்பிக்கையில்” அவரது வாழ்க்கை தீவிரமாக மாறியது. இப்போது அவர் கிறிஸ்துவின் அன்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறார், குறிப்பாக அவர் ஆயுதப்படைகளில் ஊனமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்வான இன்விக்டஸ் கேம்ஸில்  தன்னுடன் போட்டியிடும் வீரர்களுடன் அதைச் செய்கிறார்.

ஸ்காட்டைப் பொறுத்தவரை, வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் ஆராதனை பாடல்களைக் கேட்பது ஆகியவை விளையாட்டுகளுக்குச் செல்வதற்கு முன் அவரை நிலைப்படுத்துகிறது. பின்னர், அங்குப் போட்டியிடும் சக வீரர்களுக்கு “இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கவும், இரக்கம், மென்மை மற்றும் கருணை காட்டவும்” தேவன் அவருக்கு உதவுகிறார்.

கலாத்தியாவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய ஆவியின் கனிகளில் சிலவற்றை ஸ்காட் இங்கே குறிப்பிடுகிறார். அவர்கள் கள்ள போதகர்களின் தாக்கத்தின் கீழ் போராடினர், எனவே பவுல் அவர்களை “ஆவியினால் வழிநடத்தப்பட்டு” (கலாத்தியர் 5:18) தேவனுக்கும் அவருடைய கிருபைக்கும் உண்மையாக இருக்கும்படி ஊக்குவிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஆவியின் கனியாகிய  “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (வ. 22-23) ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.

தேவனின் ஆவியானவர் நம்முள் வசிப்பதால், நாமும் ஆவியின் நற்குணத்தினாலும் அன்பினாலும் நிறைந்திடுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களிடம் கனிவும் கருணையும் காட்டுவோம்.