அலாஸ்காவின் விட்டியரில் வசிக்கும் முந்நூறு பேரில் பெரும்பாலானோர் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்கள். அதனால்தான் விட்டியர் “ஒரே கூரையின் கீழ் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. அதின் முன்னாள் குடியிருப்பாளரான ஆமி, “நான் எதற்கும் கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியதில்லை – மளிகைக் கடை, நோட்டரி பப்ளிக், பள்ளி மற்றும் தபால் அலுவலகம் எங்கள் தரை தளத்தில் இருந்தன, ஒரு லிஃப்ட் சவாரி மட்டுமே போதுமானது!” என்று கூறுகிறார்.
“வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்ததால், எனக்கு யாரும் தேவையில்லை என்று நினைத்து, நான் அடிக்கடி தனிமையில் இருக்க விரும்பினேன்” என்று அமி பகிர்ந்துகொள்கிறார். “ஆனால் சக குடியிருப்பாளர்கள் மிகவும் கரிசணையோடு இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு நான் தேவை என்பதையும், எனக்கு அவர்கள் தேவை என்பதையும் கற்றுக்கொண்டேன்” என்கிறார்.
ஆமியைப் போலவே, நாமும் சில சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்தி, சமூகத்தைத் தவிர்க்க விரும்பலாம். பிந்தையது குறைந்த மன அழுத்தமாகத் தெரிகிறது! ஆனால் இயேசுவை விசுவாசிக்கிறவர் தனிமையிலும் மற்ற விசுவாசிகளுடன் நல்லுறவு கொண்டவராக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. அப்போஸ்தலராகிய பவுல் விசுவாசிகளின் ஐக்கியத்தை மனித சரீரத்திற்கு ஒப்பிடுகிறார். ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் ஒரு தனித்துவமான செயல்பாடு உள்ளது போல, ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தனித்துவமான பாத்திரத்தை கொண்டுள்ளனர் (ரோமர் 12:4). ஒரு சரீரத்தின் உறுப்பு தனியாக இருக்க முடியாதது போல, ஒரு விசுவாசி தனிமையில் நம்பிக்கையின் வாழ்க்கையை வாழ முடியாது (வச. 5). சமூகத்தின் மத்தியில் தான் நாம் நம்முடைய வரங்களைப் பயன்படுத்தி (வச. 6-8; 1 பேதுரு 4:10) இயேசுவைப் போல வளர்கிறோம் (ரோமர் 12:9-21).
நமக்கு மற்றவரின் தேவை அவசியம்; நமது ஒற்றுமை கிறிஸ்துவில் உள்ளது (வச. 5). அவருடைய உதவியால், நாம் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வதால், அவருடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளலாம் மற்றும் அவருடைய அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கலாம்.
நீங்கள் தேவனோடு நடக்க கிறிஸ்தவ சமுதாயம் உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறது? மற்ற விசுவாசிகள் உங்களை எப்படி ஊக்கப்படுத்தினார்கள்?
அன்பான தேவனே, என் சகோதர சகோதரிகளுக்காய் உமக்கு நன்றி.