ஒரு (ஃபேஸ்புக்) முனநூல் நினைவு, பாம்பு-ஏணி விளையாட்டில் வெற்றிபெற்ற என்னுடைய ஐந்து வயது மகளின் புகைப்படத்தை பிரசுரித்திருந்தது. நாங்களும் குழந்தைகளாக இருந்தபோது இந்த போர்டு விளையாட்டை அடிக்கடி விளையாடியதால், எனது சகோதரனையும் சகோதரியையும் இடுகையில் குறியிட்டேன். இந்த விளையாட்டு வேடிக்கையானது மற்றும் பல நூற்றாண்டுகளாக விளையாடப்படுகிறது. மக்கள் எண்ணுவதைக் கற்றுக்கொள்வதற்கும் இது உதவுகிறது. மேலும் ஒரு ஏணியில் ஏறி, 100 மதிப்பெண்ணை வேகமாகப் பெறுவதன் மூலம் விளையாட்டை வெல்வதற்கான சிலிர்ப்பை வழங்குகிறது. ஆனால் கவனியுங்கள்! நீங்கள் தவறி 98ஆம் இடத்தில் போய் நின்றால், அங்கேயிருக்கும் பாம்பிலிருந்து சரிந்து வெகு தூரம் கீழிறங்கிவிடுவீர்கள்.
அதுவும் வாழ்க்கை பிரதிபலிக்கிறதல்லவா? நம்முடைய நாட்களின் ஏற்ற தாழ்வுகளுக்கு இயேசு நம்மை அன்புடன் தயார்படுத்தினார். நமக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசு கூறுகிறார் (யோவான் 16:33). ஆனால் அவர் சமாதான செய்தியையும் பகிர்ந்து கொண்டார். நாம் எதிர்கொள்ளும் சோதனைகளால் நாம் அசைக்கப்பட வேண்டியதில்லை. ஏன்? கிறிஸ்து உலகத்தை வென்றார்! அவருடைய வல்லமையை விடப் பெரியது எதுவுமில்லை. எனவே நாமும் நம் வழியில் வரும் அனைத்தையும் அவர் நமக்கு கொடுத்திருக்கும் பெலத்தால் மேற்கொள்ள முடியும் (எபேசியர் 1:19).
பாம்பு-ஏணி விளையாட்டைப் போன்றே, சில சமயங்களில் வாழ்க்கை நம்மை மகிழ்ச்சியுடன் மேலேற அனுமதிக்கும் ஒரு ஏணியை அளிக்கிறது. பல நேரங்களில் வழுக்கும் பாம்பின் வழியாய் நாம் கீழிறங்கவேண்டியிருக்கிறது. ஆனால் நம்பிக்கையின்றி வாழ்க்கை என்ற விளையாட்டை நாம் விளையாட வேண்டியதில்லை. அதையெல்லாம் சமாளிக்க இயேசுவின் வல்லமை நமக்கு இருக்கிறது.
இன்று என்ன சவால்களை சமாளிக்க உங்களுக்கு உதவி தேவை? வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளை சமாளிக்க இயேசுவின் வல்லமையைக் குறித்து கவனம் செலுத்துவது எப்படி உங்களை ஊக்குவிக்கும்?
அன்புள்ள இயேசுவே, நீர் உலகத்தை ஜெயித்துவிட்டீர் என்பதை நினைவூட்டியதற்கு நன்றி! வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கையாள உமது வல்லமையை நம்பியிருக்க எனக்கு உதவிசெய்யும்.