எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.
என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).
அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).
தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம்.
பொறுமையான அன்பின் மூலம் மாற்றத்தை நீங்கள் எவ்வாறு கண்டீர்கள்? தேவனுடைய அன்பை அனுபவிப்பதிலும் பகிர்ந்து கொள்வதிலும் நீங்கள் எவ்வாறு வளரலாம்?
அன்பான தேவனே, என்னை ஒருபோதும் கைவிடாததற்கும், காயமடைந்த என் இதயத்தை பொறுமையாக நேசிப்பதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் நன்றி. அதே பொறுமையான அன்புடன் மற்றவர்களையும் நேசிக்க எனக்கு உதவிசெய்யும்.