ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, மைசூரில் உள்ள அரச அரண்மனை, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் புகழ்பெற்ற பெயர்களைக் கொண்டுள்ளன. சிலவைகள் பளிங்குக் கற்களால் ஆனவை; சிலவைகள் சிவப்புக் கல்லால் ஆனவை; சிலவைகள் பாறைகளால் வெட்டப்பட்டவை; மற்றவை தங்கத்தால் பதிக்கப்பட்டவைகள். ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவை அனைத்தும் கட்டிடங்கள்.
கட்டடம் என்பது விசுவாசிகளைக் குறிக்க வேதம் பயன்படுத்தும் முக்கியமான உருவகங்களில் ஒன்று. “நீங்கள்… தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 3:9) என்று பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு வேறு பெயர்களும் உள்ளன: “மந்தை” (அப்போஸ்தலர் 20:28), “கிறிஸ்துவின் சரீரம்” (1 கொரிந்தியர் 12:27), “சகோதர சகோதரிகள்” (1 தெசலோனிக்கேயர் 2:14) மற்றும் பல.
கட்டிட உருவகம் 1 பேதுரு 2:5 இல் மீண்டும் மீண்டும் வருகிறது. பேதுரு திருச்சபையைப் பார்த்து, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்… கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் 6ஆம் வசனத்தில் ஏசாயா 28:16 மேற்கோள் காண்பிக்கிறார், “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்.” இயேசுவே அவருடைய கட்டிடத்தின் அஸ்திபாரம்.
திருச்சபையைக் கட்டுவது நமது வேலை என்ற உணர்வு நமக்கு இருக்கலாம். ஆனால் “நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 16:18). நாம் நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அந்தத் துதிகளை நாம் அறிவிக்கும்போது, அவருடைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம்.
இயேசு தனது திருச்சபையைக் கட்டியெழுப்புவதன் அர்த்தம் என்ன? அந்த வேலையில் நீங்கள் எப்படி பங்கேற்கலாம்?
அன்பான தேவனே, என்னைக் குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிற தருணங்களை எனக்கு மன்னித்தருளும். உம்முடைய திருச்சபையை நீர் கட்டுவிக்கும்போது, உமக்கு ஊழியம் செய்யவும் மற்றவர்களை நேசிக்கவும் என்னை பயன்படுத்தும்.