அமெரிக்காவைச் சேர்ந்த ஜே ஸ்பைட்ஸ், டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டபோது, அவர் பெற்ற முடிவுகளுக்கு எதுவும் அவரை தயார்படுத்தியிருக்க முடியாது. அவற்றில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் தேசத்தின் இளவரசர்! விரைவில் விமானத்தில் ஏறி அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் வந்ததும், அரச குடும்பத்தினர் அவரை வரவேற்று, ஒரு பண்டிகை கொண்டாட்டம், ஆடல், பாடல், பதாகைகள் மற்றும் அணிவகுப்பு ஆகியவற்றால் வரவேற்றனர். 

தேவனுடைய நற்செய்தி அறிவிப்பாக இயேசு பூமிக்கு வந்தார். அவர் தனது சொந்த மக்களாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு நற்செய்தியைக் கூறவும், இருளிலிருந்து வெளியேறும் வழியைக் காட்டவும் செய்தார். “மெய்யான ஒளியை” (யோவான் 1:9) நிராகரித்து, அவரை மேசியாவாக ஏற்க மறுத்து (வச. 11) பலர் செய்தியை அக்கறையின்மையுடன் பெற்றனர். ஆனால் நம்பிக்கையின்மையும் அக்கறையின்மையும் எல்லா மக்களிடையேயும் காணப்படவில்லை. சிலர் மனத்தாழ்மையுடனும் மகிழ்ச்சியுடனும் கிறிஸ்துவின் அழைப்பைப் பெற்று, பாவத்திற்காக தேவனுடைய இறுதிப் பலியாக அவரை ஏற்றுக்கொண்டனர். மேலும் அவருடைய நாமத்தின் மீது விசுவாசம் வைத்தனர். இந்த உண்மையுள்ள மீதியானவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்கள் ஆவிக்குரிய மறுபிறப்படைந்து ராஜவம்ச பிள்ளைகளாய் “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (வச. 12). 

நாம் பாவம் மற்றும் இருளில் இருந்து திரும்பும்போது, இயேசுவை பெற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைக்கும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகள், அவருடைய ராஜ குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். ராஜாவின் பிள்ளைகளாக இருக்கும் பொறுப்புகளை ஏற்று வாழும்போது ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்.