ஒரு தீ பல்சோரா பாப்டிஸ்ட் தேவாலயத்தை தரைமட்டமாக்கியது. தீ தணிந்த பிறகு தீயணைப்பு மற்றும் சமூக உறுப்பினர்கள் கூடிவந்தபோது, காற்றில் புகை மற்றும் சாம்பலுக்கு இடையே ஒரு கருகிய சிலுவை நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் கருத்து தெரிவிக்கையில், தீ “கட்டிடத்தை எரித்தது, ஆனால் சிலுவையை எரிக்கவில்லை. அந்த கட்டிடம் ஒரு கட்டிடம் தான்; ஆலயம் என்பது அங்கிருக்கும் மக்கள் கூட்டமே என்பதை நினைவுபடுத்துகிறது.”
தேவாலயம் ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சிலுவையால் ஒன்றுபட்ட ஒரு சமூகம். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவர் பேதுருவிடம் தனது உலகளாவிய தேவாலயத்தைக் கட்டுவதாகக் கூறினார், எதுவும் அதை அழிக்காது (மத்தேயு 16:18). இயேசு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை ஒரு குழுவாகச் சேர்ப்பார், அது காலம் முழுவதும் தொடரும். இந்த சமூகம் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளும், ஆனால் அவர்கள் இறுதியில் ஜெயங்கொள்ளுவார்கள். தேவன் அவர்களுக்குள்ளே தங்கி அவர்களை ஆதரிப்பார் (எபேசியர் 2:22).
ஸ்தல தேவாலயங்களை நிறுவுவதற்கு நாம் போராடும்போது, அவை தேங்கி நிற்கும் போது, கட்டிடங்கள் அழிக்கப்படும்போது, அல்லது உலகின் பிற பகுதிகளில் விசுவாசிகள் போராடுவதைப் பற்றி நாம் கவலைப்படும்போது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். தேவ ஜனம் விடாமுயற்சியுடன் செயல்பட அவர் நமக்கு உதவுகிறார். இன்று அவர் கட்டும் தேவாலயத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். அவர் நம்முடனும் நமக்காகவும் இருக்கிறார். அவருடைய சிலுவை மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது.
எந்தெந்த வழிகளில் நீங்கள் சக விசுவாசிகளை ஆதரிக்கலாம்? நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது தேவாலயத்திற்கான தெய்வீக திட்டத்துடன் எவ்வாறு தொடர்புடையதாகிறது?
தேவனே, உமது ஜனங்களை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தும். அவர்களை ஞானத்தால் நிரப்பி, அவர்களைப் பாதுகாத்து, அவர்கள் உமக்கு உண்மையாக வாழ உதவிசெய்யும்.