1960 ஆம் ஆண்டில், ஓட்டோ ப்ரீமிங்கர் தனது “எக்ஸோடஸ்” திரைப்படத்தின் மூலம் சர்ச்சையைத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்த யூத அகதிகளின் கற்பனைக் கதையை இந்தத் திரைப்படம் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட ஒரு இளம் யூதப் பெண் மற்றும் ஒரு அரேபிய மனிதனின் உடல்கள் விரைவில் இஸ்ரவேல் தேசமாக இருக்கும் நாட்டின் அதே கல்லறையில் புதைக்கப்படுவதுடன் படம் முடிவடைகிறது.
பிரேமிங்கர் முடிவை நம்மிடத்தில் விட்டுவிடுகிறார். இது விரக்தியின் உருவகமா, என்றென்றும் புதைக்கப்பட்ட கனவா? அல்லது வெறுப்பும் குரோதமும் கொண்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு மக்கள் – இறப்பிலும் வாழ்விலும் ஒன்று சேர்வதால் அது நம்பிக்கையின் அடையாளமா?
ஒருவேளை சங்கீதம் 87-ஐ எழுதியதாகக் கருதப்படும் கோராகின் புத்திரர்கள் இந்தக் காட்சியின் பிந்தைய பார்வையை எடுத்திருக்கலாம். நாங்கள் இன்னும் காத்திருக்கும் ஒரு அமைதியை அவர்கள் எதிர்பார்த்தனர். எருசலேமைப் பற்றி, “தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும்” (வச. 3) என்று சொல்லுகிறது. யூத மக்களுக்கு எதிராகப் போரிட்ட வரலாற்றைக் கொண்ட தேசங்கள் ஒரே உண்மையான கடவுளை ஒப்புக்கொள்ள ஒன்றுசேரும் ஒரு நாளைப் பற்றி அவர்கள் பாடினர்: ராகாப் (எகிப்து), பாபிலோன், பெலிஸ்தியர்கள், தீரு, எத்தியோப்பியர்கள் (வச. 4). அனைவரும் எருசலேமிடமும், அதின் தேவனிடத்திற்கும் இழுக்கப்படுவார்கள்.
சங்கீதத்தின் முடிவு கொண்டாட்டமானது. எருசலேமில் உள்ள மக்கள், “எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது” (வச. 7) என்று பாடுவார்கள். அவர்கள் யாரைப் பாடுகிறார்கள்? ஜீவத் தண்ணீராக இருப்பவர், எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார் (யோவான் 4:14). நிலையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடியவர் இயேசு ஒருவரே.
உலகளாவிய மற்றும் தனிப்பட்ட விதத்திலும் எந்த விதமான மோதல்கள் உங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகின்றன? தேவனுடைய சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பீர்கள்?
தகப்பனே, அனைத்த மக்களும் உம்முடைய குமாரனிடத்திற்கு ஈர்க்கப்பட்டு, சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிக்கும்படியாய் வேண்டுகிறேன்.