“நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என் மனைவி, காரி, என்னை ஜன்னலுக்கு அழைத்து, எங்கள் முற்றத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எங்கள் வேலிக்கு வெளியே உள்ள காடுகளில் ஒரு வயது முதிர்ந்த பெண்மானைக் காட்டினாள். எங்கள் வீட்டு வேலிக்குள் இருந்த பெரிய நாய்கள், வேகமாய் அந்த மானை நோக்கி ஓடின, ஆனால் அவைகளைப் பார்த்து குரைக்கவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவைகள் முன்னும் பின்னுமாக நடந்தன. அந்த பெண் மான் நின்று நாய்களைப் பார்த்தபோது, நாய்களும் தங்கள் முன்னங்கால்களை நேராக்கிக் கொண்டு, மீண்டும் ஓடத் தயாரான நிலையில், மீண்டும் குனிந்துகொண்டன. இது வேட்டையாடும் விலங்கினத்தின் வழக்கமான நடத்தை இல்லை. அந்த பெண் மானும் நாய்களும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தன!

காரிக்கும் எனக்கும், அந்த நிகழ்வு வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த காட்சியைக் காண்பித்தது. ஏசாயா தீர்க்கதரிசி, “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (ஏசாயா 65:17) என்ற வார்த்தைகளுடன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிவிக்கிறார். மேலும்; “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்” (வச. 25) என்றும் கூறுகிறார். இனி வேட்டையாடுதல் இல்லை. அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருப்பர். 

தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் மிருக ஜீவன்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் தனது படைப்பிற்காக, குறிப்பாக “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு” என்னென்ன ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்பதை அவை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன (1 கொரிந்தியர் 2:9). அது எவ்வளவு அழகான இடமாக இருக்கப்போகிறது! விசுவாசத்தின் மூலம் நாம் அவரை நம்பும்போது, அவருடைய சமூகத்தில் நித்திய காலமாய் இளைப்பாறுதலை அனுபவிக்கக்கூடிய யதார்த்தத்தை நாம் காணும்படிக்கு அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.