ஒரு வாலிபனாக, விஜய் தனது தாயைப் புற்றுநோயால் இழந்தார். அவர் வீட்டையும் இழந்து, விரைவில் பள்ளியை விட்டும் வெளியேறினார். அவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தார் மற்றும் அடிக்கடி பசியுடன் இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, விஜய் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார், அது மற்றவர்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்கள் தோட்டத்தில் வளர்க்கப்படும் உணவைத் தாங்களே நடவும், அறுவடை செய்யவும் மற்றும் தயாரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது. உணவு இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது, ஏதாவது இருப்பவர்கள் இல்லாதவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிர்வாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிறர் மீதான விஜய்யின் அக்கறை, நீதி மற்றும் கருணைக் குறித்த தேவனின் இதயத்தை எதிரொலிக்கிறது.
நாம் எதிர்கொள்ளும் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி தேவன் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். அவர் இஸ்ரவேலில் பயங்கரமான அநீதியைக் கண்டபோது, அவர்களுடைய மாய்மாலத்தைக் கண்டிக்க ஆமோஸ் தீர்க்கதரிசியை அனுப்பினார். ஒரு காலத்தில் எகிப்தின் அடக்குமுறையிலிருந்து தேவன் காப்பாற்றிய மக்கள் இப்போது ஒரு ஜோடு பாதரட்சைக்கு தங்கள் அண்டை வீட்டாரை அடிமைகளாக விற்கிறார்கள் (ஆமோஸ் 2:6). அவர்கள் அப்பாவி ஜனங்களுக்குத் துரோகம் செய்தார்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுத்தார்கள், தரித்திரருடைய “தலையின்மேல்” மிதித்தார்கள் (வ. 6-7), இவை அனைத்தினுடே காணிக்கைகள் மற்றும் விசேஷித்த நாட்களுடன் தேவனைப் பணிவது போல் பாசாங்கு செய்தனர் (4:4-5).
“நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்” (5:14) என்று ஆமோஸ் மக்களிடம் கெஞ்சினார். விஜய்யைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடன் பழகுவதற்கும் உதவி செய்வதற்கும் போதுமான வலியையும் அநீதியையும் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோம். “நன்மையைத் தேட” மற்றும் அணைத்து வகையான நீதியையும் விதைப்பதில் அவருடன் இணைவதற்கான நேரம் கனிந்துள்ளது.
உங்கள் சொந்த அனுபவத்தில் எதிரொலிக்கும் என்ன அநீதியைப் பிறர் சகித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்? அவர்களுக்கு உதவத் தேவன் உங்களை எவ்வாறு பயன்படுத்தக் கூடும்?
நீதியின் தேவனே, இந்த உலகில் உள்ள வேதனைகளையும் துன்பங்களையும் நீர் கண்டு செயல்படுவதற்காக உமக்கு நன்றி.