நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, ​​​​நான் இயேசுவை சந்திக்கும் இடமாக “மலையுச்சி” அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம்,  வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். “தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை ​​இன்றி அதனை நிரூபிக்க இயலாது” என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா  கற்றுக்கொண்டது போல், “தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.