செல்வா ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் முழுநேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவரது மூத்த சகோதரன் மோகன் மகிழ்ச்சியடைந்தார், ஆனால், சகோதரர்களாக, சிறுவயதில் செல்வாவை அவர் எவ்வாறு புழுதியில் தள்ளி சண்டையில் வெல்வார் என்பதைச் சொல்லி அவரையறியாமலேயே கிண்டல் செய்தார். செல்வா வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறிவிட்டார், எனினும் அவர் எப்போதும் மோகனின் சிறிய தம்பியாகவே இருப்பார்.

நீங்கள் மேசியாவாகவே இருந்தாலும் குடும்பத்தால் மதிக்கப்படுவது கடினம். இயேசு நாசரேத்தின் மக்களிடையே வளர்ந்தார், எனவே அவர் விசேஷித்தவர் என்று நம்புவதற்கு அவர்கள் சிரமப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அவரை கண்டு வியந்தனர். “இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா?” (மாற்கு 6:2-3). இயேசு, “தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” (வ. 4) என்று குறிப்பிட்டார். இவர்கள் இயேசுவை நன்கு அறிந்திருந்தனர், ஆனால் அவர் தேவனின் குமாரன் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

ஒருவேளை நீங்கள் ஒரு ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். உங்கள் ஆரம்பக்கால நினைவுகளில் சபைக்குச் செல்வதும், பாடல்களைப் பாடுவதும் நிறைந்திருக்கலாம். இயேசு எப்போதும் ஒரு குடும்பத்தாரைப் போலவே உணர்ந்தார். நீங்கள் அவரை விசுவாசித்துப் பின்பற்றினால், இயேசு உங்கள் குடும்பத்தினர். அவர் “(நம்மை) சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபிரெயர் 2:11). தேவனின் குடும்பத்தில் இயேசு நம் மூத்த சகோதரர் (ரோமர் 8:29) இது ஒரு பெரிய பாக்கியம், ஆனால் நம்மிடையேயான நெருக்கம் அவரை சாதாரணமானவராகக் காட்டலாம். ஒருவர் குடும்பத்தினராக இருப்பதால் அவர்கள் விசேஷித்தவர் அல்ல என்று அர்த்தமல்ல.

இயேசு நமது குடும்பத்தினரும், குடும்பத்தினரை விட மேலானவர் என்பதிலும்  உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இன்று நீங்கள் அவரைப் பின்தொடரும்போது, ​​அவர் மேலும் நெருக்கமானவராகவும், மேலும் விசேஷித்தவராகவும் உங்களுக்கு மாறுவாராக.