“நான் அதைச் செய்யவில்லை!” அது ஒரு பொய், தேவன் என்னை இடைமறித்திருக்காவிட்டால் நான் கிட்டத்தட்ட அதிலேயே நிலைத்திருந்திருப்பேன். நான் நடுநிலைப் பள்ளியிலிருந்தபோது, ஒரு நிகழ்ச்சியின் போது எங்கள் இசைக்குழுவினரின் பின்பாக எச்சிலைத் துப்பிய கூட்டத்தில் நானும் இருந்தேன். எங்கள் இயக்குநர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் ஒழுக்கத்திற்கு பேர்போனவர், நான் அவரை கண்டாலே பயப்படுவேன். அதனால் என் சகாக்கள் என்னைக் குற்றத்தில் சிக்கவைத்தபோது, நான் அவரிடம் பொய் சொன்னேன். பிறகு என் தந்தையிடமும் பொய் சொன்னேன்.
ஆனால் பொய்யைத் தொடர்ந்திடத் தேவன் அனுமதிக்க மாட்டார். அவர் எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியைக் கொடுத்தார். பல வாரங்கள் எதிர்த்த பிறகு, நான் மனந்திரும்பினேன். நான் தேவனிடமும் அப்பாவிடமும் மன்னிப்பு கேட்டேன். சிறிது நேரம் கழித்து, நான் எனது இயக்குநரின் வீட்டிற்குச் சென்று கண்ணீருடன் ஒப்புக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, அவர் அன்பாகவும் மன்னிப்பவராகவும் இருந்தார்.
அந்த பாரம் நீங்கினது எவ்வளவு அருமையாக இருந்தது என்பதை என்னால் மறக்கவே முடியாது. நான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டு, பல வாரம் கழித்து முதல்முறையாக சநதோஷப்பட்டேன். தாவீது தனது வாழ்க்கையிலும் குற்றம் சுமந்து அறிக்கை செய்த நேரத்தை விவரிக்கிறார். அவர் தேவனிடம், “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால்” என்றவர் மேலும், “என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்” (சங்கீதம் 32:3-5) என்கிறார்.
நம்பகத்தன்மை தேவனுக்கு முக்கியம். நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளவும், நாம் தவறிழைத்தவர்களிடமும் மன்னிப்பு கேட்க அவர் விரும்புகிறார். “தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (வ. 5) என்று தாவீது அறிவிக்கிறார். தேவனின் மன்னிப்பால் உண்டாகும் விடுதலையை அனுபவிப்பது எவ்வளவு அருமையானது!
தேவனிடம் உண்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வாறு உதவியது? இயேசுவின் மன்னிப்பு எவ்வாறு உங்கள் பாரத்தை இலகுவாக்கி, உங்கள் வாழ்க்கையை மாற்றியது?
அன்பு தகப்பனே, நான் உம்மிடம் என் பாவங்களை ஒப்புக்கொள்ளும்போது அவற்றை மன்னித்ததற்காக நன்றி. உம்முடன் எப்போதும் உண்மையாக இருக்க எனக்கு உதவும்.