ஒரு பட்டமளிப்பு விழாவில், மேக்கிங் யுவர் பெட் எவெரி டே என்ற தலைப்பில் பேசி இணையத்தில் 100மில்லியன் முறை பார்க்கப்பட்ட  காணொளியில் தோன்றிய இராணுவ வீராகவே அவர் அறியப்படுகிறார். ஆனால் ஓய்வுபெற்ற கடற்படை அட்மிரல் வில்லியம் மெக்ராவன் மற்றொரு முக்கியமான படிப்பினையைப்  பகிர்ந்து கொள்கிறார். மத்திய கிழக்கில் ஒரு இராணுவ நடவடிக்கையின் போது, ​​ஒரு அப்பாவி குடும்பத்தைச் சேர்ந்த பலர் தவறுதலாகக் கொல்லப்பட்டதை மெக்ராவன் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார். அக்குடும்பத்திடம் நேர்மையாக மன்னிப்பு கேட்க வேண்டியதே சரியானது  என்று நம்பிய மெக்ராவன், மனம் உடைந்த தந்தையிடம் துணிகரமாக மன்னிப்பு கேட்டார்.

“நான் ஒரு சிப்பாய், ஆனால் எனக்கும் குழந்தைகள் உள்ளனர், என் உள்ளம் உங்களுக்காக வருந்துகிறது” என்று மெக்ராவன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் அவரிடம் கூறினார். அந்த மனிதனின் பதில்? அவர் மெக்ராவனுக்கு மன்னிப்பு என்ற தாராள பரிசை வழங்கினார். அந்த மனிதனின் உயிர் பிழைத்த மகன் மூலம், “மிக்க நன்றி. உங்களுக்கு எதிராக நாங்கள் எதையும் எங்கள் உள்ளத்தில் கொள்ள மாட்டோம்” என்று அவரிடம் கூறினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதுபோன்ற தாராளமான கிருபையைப் பற்றி எழுதினார்: “நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” (கொலோசெயர் 3:12). வாழ்க்கை நம்மை பல்வேறு வழிகளில் சோதிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார், எனவே கொலோசேயில் உள்ள சபை விசுவாசிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வ.13).

இத்தகைய இரக்கமுள்ள, மன்னிக்கும் இதயங்களைக் கொண்டிருக்க எது நமக்கு உதவுகிறது? தேவன் தாராளமான அன்பே. பவுல் நிறைவு செய்ததுபோல்,  “இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்” (வ.14).