ரேகாவை பற்றி சுமதி கூறும்போது, அவள் தன் தோழியின் “தேவன் மீதான ஆழமான, காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசம்” மற்றும் நாட்பட்ட பலவீனமான நிலையில் வாழும் போதும் அவள் வளர்த்துக் கொண்ட சகிப்புத்தன்மையைப் பெரிதாகப் பேசுவாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, ரேகா தனது அறையின் சிறிய ஜன்னலிலிருந்து நிலவைக் கூட பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள். ஆனால் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவள் தேவனை நம்புகிறாள்; வேதாகமத்தைப் படிக்கிறாள், கற்கிறாள். இதை, “மனச்சோர்வுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின் போது எவ்வாறு உறுதியாக நிற்பது என்று அவள் அரிவாள்” எனச் சுமதி விவரிக்கிறாள்.
ரேகாவின் உறுதியையும் விடாமுயற்சியையும், பெலிஸ்தியரிடமிருந்து தப்பியோட மறுத்த தாவீது ராஜாவின் காலத்திலிருந்த எலெயாசார் எனும் வீரனோடு சுமதி ஒப்பிடுகிறாள். முறிந்தோடிய படைகளோடு சேருவதற்குப் பதிலாக, அவன் “எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்” (2 சாமுவேல் 23:10). தேவனுடைய வல்லமையின் மூலம், “அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்” (வச. 10). சுமதி அவதானிப்பதுபோல், எலெயாசார் உறுதியுடன் வாளை பற்றிக்கொண்டதுபோல, ரேகாவும் “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை” (எபேசியர் 6:௧௭) பற்றிக்கொள்கிறாள். அதிலே, தேவனிலே, அவள் தன் பெலனைக் காண்கிறாள்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயால் மனச்சோர்வடைந்தாலும் சரி, நம் நம்பிக்கையின் களஞ்சியத்தை ஆழப்படுத்தவும், சகிக்கும்படி நமக்கு உதவவும் நாமும் தேவனை நோக்கிப் பார்க்கலாம். கிறிஸ்துவில் நாம் நமது பலத்தைக் காண்கிறோம்.
விடாமுயற்சி மற்றும் சகிப்புத்தன்மைக்குச் சாட்சியாக என்ன உதாரணங்களை நீங்கள் கண்டீர்கள்? நீங்கள் தோய்ந்துபோய், பெலனற்றதாக உணரும்போது தேவன் உங்களை எவ்வாறு மீட்டெடுத்துப் புதுப்பிக்கிறார்?
சர்வ வல்லமையின் தேவனே, என்னை நேசித்ததற்கும், சகிக்க எனக்கு உதவியதற்கும் நன்றி. நான் தொடர்ந்து உம்மை நம்பவும் நேசிக்கவும் உம்மேல் கவனம் செலுத்த எனக்கு உதவும்.