ஜனங்கள் மரிக்கும் தறுவாயில், அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும்,  அவர்கள் உயிருடன் இருந்தபோது பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சம்பளத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒருவர் இருக்கிறார். இரங்கல் செய்திகள் வாசிக்கப்படுகையில் அவர்  குறுக்கிடுவார். திகைக்கும் பொறுப்பாளர்கள் எதிர்க்கத் துவங்குகையில், அவர்களை உட்காரச் சொல்வதுமுண்டு. ஒருமுறை இவர் எழுந்து நின்று  சவப்பெட்டியிலிருந்தவர் எவ்வாறு அதிர்ஷ்ட குலுக்கலில் வென்று, பின்பு அதை யாரிடமும் சொல்லாமல் பல ஆண்டுகளாகத் தன்னை வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபராகப் பிறரிடம் காட்டிக்கொண்டார் என்பதை விளக்கினார். இந்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர், விதவையான ஒரு மனைவியிடம் அவரது கணவனின் பல பாலியல் துரோகங்களை அறிக்கையிட்டார். இவரது  செயல்கள் சொந்த நலனுக்காகப் பிறரைச் சுரண்டுவதோ அல்லது நல்ல நோக்கத்தில் செய்யப்படுகிறதோ என்று கேட்கலாம், ஆனால் ஜனங்கள் தங்களுடைய கடந்தகால பாவங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற மக்களின் வாஞ்சை இதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

வேறொருவர் நமக்காக அறிக்கை செய்வதென்பது (குறிப்பாக நாம் இறந்த பிறகு) இரகசியங்களைக் கையாள்வதற்கான ஒரு பயனற்ற மற்றும் ஆபத்தான வழியாகும். எவ்வாறாயினும், இந்தக் கதைகள் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன: நம் சுமையை இறக்கிட, நாம் அறிக்கையிட வேண்டும். அறிக்கையிடலானது நாம் மறைத்த, புரையோடச் செய்த காரியங்களைச் சுத்தப்படுத்துகிறது. “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” (5:16) என்று யாக்கோபு கூறுகிறார். அறிக்கையிடல்  நம்மைக் கட்டி வைத்திருக்கும் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது, தேவனுடன் நெருங்கிட நம்மை விடுவிக்கிறது. அவரிடமும், நமது விசுவாச அங்கத்தினரோடும் திறந்த மனதுடன் ஜெபிக்கச் செய்கிறது. அறிக்கையிடல் குணப்படுத்துகிறது.

தேவனிடமும் நமக்கு நெருக்கமானவர்களிடமும் நாம் புதைக்க ஆசைப்படும் வலிகள் மற்றும் தோல்விகளை ஒப்புக்கொண்டு, ஒரு திறந்த வாழ்க்கை வாழ யாக்கோபு நம்மை  அழைக்கிறார். இந்த சுமைகளை நாம் மட்டும் சுமக்க வேண்டியதில்லை. அறிக்கையிடல் நமக்கான ஒரு பரிசு. நம் இருதயத்தைச் சுத்திகரிக்கவும், நம்மை விடுவிக்கவும் தேவன் அதைப் பயன்படுத்துகிறார்.