ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம்.
தீங்கிழைக்கும் தாக்கங்களின் பாதிப்புகளை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்? தேவனுடனான ஆழமான உறவு எவ்வாறு சமாதானத்தைக் கொண்டுவருகிறது?
அன்பு தேவனே, உம்மில் இளைப்பாறுவதின் மூலம் தீமையானதை எதிர்க்கவும், நன்மையானதை அறியவும் தயவாய் எனக்கு உதவும்.