“அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?” என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். “எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?” என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).
அதற்கு இயேசு, “உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.” (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.
உங்கள் நிலைமையை மற்றவர்களுடன் எப்போது ஒப்பிட்டுப் பார்த்தீர்கள்? என்னென்ன நடைமுறை வழிகளில் நீங்கள் தேவனைப் பின்பற்றலாம்?
அன்புள்ள இயேசுவே, உம்மை நம்பி பின்பற்ற எனக்கு உதவும்.