குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜோர்ன் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.
இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.
ஜோர்னும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம்.
எளிமையான ஜெப வீரர் யாரையாகிலும் உங்களுக்குத் தெரியுமா? அந்த நபர் எவ்வாறு கிறிஸ்துவின் உள்ளத்தைப் பிரதிபலிக்கிறார்?
இயேசுவே, நீர் பிறருக்கு ஊழியம் செய்து அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தீர். ஒவ்வொரு நாளும் உம்மை மகிழ்ச்சியுடன் நேசித்துச் சேவித்திட எனக்கு உதவும்.