எனது “மாமா” மோகன் காலமானபோது, பலர் பலவகையான அஞ்சலிகளைச் செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம். தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.
மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:”சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” (கலாத்தியர் 5:13) என்றெழுதினார். ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?
பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக.
யாராவது உங்களுக்கு எப்போதாகிலும் தியாகமாகச் சேவை செய்துள்ளார்களா? ஒருவேளை உங்கள் சொந்த குடும்பத்தில் துவங்கி, நீங்கள் பிறருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்?
அன்பு தகப்பனே, இயேசுவின் உன்னதமான முன்மாதிரிக்காகவும், எனக்காக அவர் செய்த தியாகத்திற்காகவும் நன்றி. இயேசுவின் சிந்தையைப் பெற தயவாய் எனக்கு உதவும்.