பள்ளி பாடங்களுக்குப் பின் வேதாகம படிப்பு என்ற நோக்கத்தில் இயங்கும் ஒரு குழுவில், வாரத்திற்கு ஒருமுறை என் மனைவி சுமதி ஊழியம் செய்கிறாள். அதிலே, போரினால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காகப் பணத்தை நன்கொடையாக அளிக்கும்படி குழந்தைகளிடம் கேட்கப்பட்டது. சுமதி எங்கள் பதினொரு வயது பேத்தி ரஞ்சனியிடம் இத்திட்டத்தைப் பற்றிச் சொன்ன ஒரு வாரத்திற்குப் பிறகு, அவளிடமிருந்து எங்களுக்கு ஒரு கடித உறை கிடைத்தது. அதில் சுமார் ரூ. 250 இருந்தது: “உக்ரைனில் உள்ள குழந்தைகளுக்காக என்னிடம் இருப்பது இதுதான். மேலும் பின்னர் அனுப்புகிறேன்” என்ற குறிப்புமிருந்தது.
ரஞ்சனி உதவ வேண்டும் என்று சுமதி பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஆவியானவர் அவளைத் தூண்டியிருக்கலாம். மேலும் இயேசுவை நேசித்து அவருக்காக வாழ முற்படும் ரஞ்சனி செயல்பட்டாள்.
ஒரு தயாள மனதிலிருந்து வந்த இந்த சிறிய பரிசை சிந்திக்கையில், நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். கொடுத்தல் குறித்து 2 கொரிந்தியர் 9ல் பவுல் வழங்கிய சில அறிவுரைகளை இது பிரதிபலிக்கிறது. முதலாவது அப்போஸ்தலன், நாம் பெருக விதைக்கும்படி அறிவுறுத்துகிறார் (வ. 6). “என்னிடம் இருப்பதெல்லாம்” என்பது நிச்சயமாகவே பெருக விதைப்பதாகும். நாம் “கட்டாயத்தினால்” (வ. 7) அல்ல, தேவன் வழிநடத்தும் விதமாகவும் நம்மால் இயன்றதைப் போலவும் நம்முடைய ஈவுகள் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பவுல் எழுதினார். மேலும் சங்கீதம் 112:9ஐ மேற்கோள் காட்டி, “ஏழைகளுக்கான ஈவுகளின்” (வ. 9) மதிப்பைக் குறிப்பிட்டார்.
கொடுக்கும்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று கேட்போமாக. அவர் நம்மை வழிநடத்தும் போது, தேவைப்படுபவர்களுக்கு நம்முடைய ஈவுகளை வழங்குவதில் நாம் தாராளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது, ”தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும்” (2 கொரிந்தியர் 9:11). அதுவே தாராள மனதுடன் கொடுப்பது.
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க உங்களைத் தூண்டுவது எது? அவர்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்கள்?
அன்பு தேவனே, உமது தாராள குணத்தை பிரதிபலிக்கும் வகையில், நீர் விரும்பும் தாராள மனப்பான்மைக்கு நேராக என்னை வழிநடத்தும்.