நானும் என் மனைவியும் எங்கள் உயர்கல்வியை முடித்தபோது, குறைந்த வட்டி விகிதத்தில் ஒருங்கிணைக்க வேண்டிய கடன் நிறைய இருந்தது. நாங்கள் உள்ளூர் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தோம், ஆனால் நாங்கள் நீண்ட காலமாக அந்த நகரத்தில் வசிக்கவோ, வேலையோ செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் சபையின் மூப்பராக இருந்த என் நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். “நான் இதை என் மனைவியிடம் குறிப்பிட விரும்புகிறேன்,” என்று அவர் போகும்போது சொல்லிவிட்டுச் சென்றார்.
சில மணி நேரம் கழித்து,அலைபேசி அழைத்தது. அது என் நண்பன்தான், “நானும் என் மனைவியும் உனக்குத் தேவையான பணத்தை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க விரும்புகிறோம்,” என்று அவர் முன்வந்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, அதனால், “அப்படி உங்களிடம் நான் கேட்கக் கூடாது” என்று பதிலளித்தேன். “நீ கேட்கவில்லை!” என் நண்பர் தமாஷாகப் பதிலளித்தார். அவர்கள் இரங்கி எங்களுக்குக் கடனைக் கொடுத்தார்கள், நானும் என் மனைவியும் எங்களால் முடிந்தவரை விரைவாகத் திருப்பிச் செலுத்தினோம்.
இந்த நண்பர்களின் தாராள குணத்திற்குத் தேவன் மீதான அவர்களின் அன்பே காரணமென்று நான் நம்புகிறேன். “இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்கீதம் 112:5) என்று வேதாகமம் சொல்வதுபோல, கர்த்தரை நம்புகிறவர்களின் இருதயம் “திடனாயிருக்கும்” ,”உறுதியாயிருக்கும்” (வச. 7-8) .ஆகவே அவர்களின் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
தேவன் நமக்கு வாழ்வையும் மன்னிப்பையும் கொடுப்பதில் தாராளமாக இருக்கிறார். நாமும் அவருடைய அன்பையும் நமக்குள்ளவற்றையும் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தாராளமாக இருப்போம்.
தேவன் உங்களிடம் எவ்வாறு தாராளமாக இருந்தார்? இன்று தேவையிலுள்ள ஒருவருடன் அவருடைய கருணையையும்,தாராளத்தையும் நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்?
அன்பு தகப்பனே, எனக்கு வாழ்வென்னும் பரிசைக் கொடுத்ததற்கும், ஒவ்வொரு நாளும் போஷித்ததற்கும் நன்றி. உம்மை நம்புவதற்கும்,உம்மை போலத் தாராள குணம் கொண்டிருக்கவும் எனக்கு உதவும்.