எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிதார் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.
அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).
மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).
தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம்.
கடினமான தருணங்களிலும் அவரைத் துதித்துப் பாட தேவன் உங்களுக்கு எவ்விதம் உதவிசெய்தார்? நீங்கள் அவ்வாறு துதிக்கும்போது, தேவன் தன்னை உங்களுக்கு எப்படி வெளிப்படுத்திக் காண்பித்தார்?
அன்பான தேவனே, நான் எதிர்கொள்ளும் அனைத்து சூழ்நிலைகளிலும் உம்மை துதிக்க எனக்கு உதவிசெய்யும்.