அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.
சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.
சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).
தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).
நீங்கள் நம்பக்கூடிய சில பொய்கள் யாவை? அவருடைய சத்தியத்தால் உங்கள் மனதை எவ்வாறு புதுப்பிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?
அன்புள்ள இயேசுவே, நீரே வழி, சத்தியம், ஜீவன். தயவு செய்து நான் நம்பிய பொய்களை எனக்குக் காண்பித்து, வேதத்தில் வாசிக்கும் சத்தியங்களை பற்றிக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.