ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர்.
ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2).
தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம்.
தேவனுடைய படைப்புகள் எங்கே பலன்கொடுக்காமால் தரிசாக இருப்பதை பார்க்கிறீர்கள்? வனாந்திரங்கள் செழிப்பைத பார்ப்பதில் நீங்கள் எவ்வாறு பங்கு கொள்வீர்கள்?
சிருஷ்டிப்பின் தேவனே, உலகில் உடைந்திருப்பதை எவ்வாறு குணப்படுத்துவது மற்றும் மீட்டெடுப்பது என்பதை எனக்குக் காண்பியும்.