பல ஆண்டுகளாக குடிப்பழக்கம் மற்றும் மனநலப் பிரச்னைகளால் போராடி வந்த தன் உறவினர் சாண்டிக்காக ஜாய் கவலைப்பட்டாள். அவள் சாண்டியின் அபார்ட்மெண்டிற்குச் சென்றபோது, கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அது காலியாகத் தெரிந்தது. அவளும் மற்றவர்களும் சாண்டியைத் தேடத் திட்டமிட்டபோது, “தேவனே, நான் பார்க்காததைக் காண எனக்கு உதவுங்கள்” என்று ஜாய் ஜெபித்தாள். அவர்கள் அந்த வீட்டைவிட்டு வெளியேறும்போது, ஜாய் சாண்டியின் வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அங்கிருந்த திரைச்சீலை அசைந்ததை அவள் பார்க்க நேரிட்டது. அந்த நேரத்தில், சாண்டி உயிருடன் இருப்பதை அவள் அறிந்தாள். அவளை அடைய அவசர உதவி தேவைப்பட்டாலும், இவ்விதமான ஜெபத்தை ஏறெடுத்ததற்காய் ஜாய் மகிழ்ச்சியடைந்தாள்.
எலிசா தீர்க்கதரிசி, தேவன் தன்னுடைய பராக்கிரமத்தை அவருக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கும்பொருட்டு விண்ணப்பிக்கிறார். சீரிய இராணுவம் அவர்களுடைய பட்டணத்தைச் சுற்றி வளைத்தபோது, எலிசாவின் வேலைக்காரன் பயத்தில் நடுங்கினான். இருப்பினும், அவன் தேவனுடைய மனுஷனாய் இல்லாதபோதிலும், தேவனுடைய உதவியினால் காணக்கூடாததை அவன் கண்டான். எலிசா தன்னுடைய வேலைக்காரன் காணவேண்டும் என்று ஜெபிக்க, “இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இராஜாக்கள் 6:17).
எலிசாவுக்கும் அவனுடைய வேலைக்காரனுக்கும், ஆவிக்குரிய மற்றும் மாம்ச வாழ்க்கைக்கு இடையே இருந்த திரையை தேவன் விலக்கிவிட்டார். திரைச்சீலையின் சிறிய மின்னலைக் காண தேவன் ஜாய்க்கு கிருபையளித்தார் என்று அவளும் நம்புகிறாள். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆவிக்குரிய தரிசனத்தைக் கொடுக்கும்படி நாமும் அவரிடம் விண்ணப்பிக்கலாம். நம் அன்புக்குரியவர்களுடனோ அல்லது நமது சமூகங்களிலோ, நாமும் அவருடைய அன்பு, உண்மை மற்றும் இரக்கத்தின் பிரதிநிதிகளாக திகழமுடியும்.
உங்களைக் கஷ்டப்படுத்தும் சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுவதற்கு உங்கள் கண்களை திறக்கும்படி நீங்கள் எவ்விதம் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம்? அவர் தனது யதார்த்தத்தை உங்களுக்கு முன்பு எப்படி வெளிப்படுத்தினார்?
எல்லா கிருபைகளின் தேவனே, உமது அன்பை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் கிருபையை காண என் கண்களை திறந்தருளும்.