பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன்.
அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும்.
நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார்.
அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது.
மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் உங்களுக்கு என்னென்ன வரங்களைக் கொடுத்திருக்கிறார்? உங்கள் வரங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், தேவன் உங்களுக்கு கொடுத்த வரங்கள் எதுவென கண்டறிய யார் உங்களுக்கு உதவக்கூடும்?
தகப்பனே, நீர் எனக்கு அருளிய வரங்களுக்காய் உமக்கு நன்றி. உமது ராஜ்யத்தில் பிறரை நேசிக்கவும் ஊழியம் செய்யவும் நீர் என்னை ஆயத்தப்படுத்திய வழிகளைப் பற்றிக்கொள்ள எனக்கு உதவிசெய்யும்.